காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி ‛பாரத் ஜோடோ யாத்திரை’ மேற்கொண்டு வருகிறார். இந்த நடைப்பயணம் கேரளாவில் நடைபெற்று வரும் நிலையில் ராகுல் காந்தியை பார்க்க கூட்டத்தில் ஓடிவந்த சிறுமி, அவரது கையை பிடித்து உற்சாகத்தில் துள்ளி குதித்து ஆனந்த கண்ணீர் வடித்தார்.
காங்கிரஸ் கட்சி இந்தியாவில் மீண்டும் தனது செல்வாக்கை நிரூபிக்கும் கட்டாயத்தில் உள்ளது. இதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சி துவங்கி உள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், கட்சியை பலப்படுத்தவும் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைக்கான நடைப்பயணம் என்ற பெயரில் பாரத் ஜோடோ யாத்திரையை துவங்கி உள்ளார். இந்த நடைப்பயணமானது கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் நடைபெறுகிறது. கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் இருந்து இந்த நடைப்பயணம் துவங்கி நடைபெற்று வருகிறது. 4 நாட்கள் வரை தமிழகத்தில் நடைப்பயணம் நடந்தது. தற்போது ராகுல்காந்தியின் நடைப்பயணம் கேரளாவில் தொடர்கிறது. ராகுல் காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். பெண்கள், சிறுவர், சிறுமிகள் என அனைவரும் அவருடன் கைக்கோர்த்து நடைப்பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் ராகுல் காந்தியுடன் செல்பி எடுத்து மகிழ்வதோடு, அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் பூங்கொத்து கொடுத்து ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் ராகுல்காந்தியின் நடைப்பயணத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அதாவது ராகுல் காந்தி தான் எம்பியாக உள்ள வயநாட்டில் தற்போது நடைப்பயணம் செய்து வருகிறார். இதனால் அவருக்கு அதிகளவில் மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் தான் ராகுல்காந்தியை பார்க்க சிறுமி ஒருவர் வேகமாக ஓடிவந்தார். அவரை பார்த்து ராகுல் காந்தி, ‛‛மெல்ல.. மெல்ல” என கூற உற்சாக மிகுதியில் வந்த சிறுமி ராகுலின் கையை பிடித்தார். மேலும் அவர் ராகுலின் கையை பிடித்தபடி துள்ளி குதித்து மகிழ்ந்தார். அதன்பிறகு அடுத்த சில நொடியில் சிறுமி அவரை அறியாமலேயே ஆனந்த கண்ணீர் வடித்தார். இதனை பார்த்த ராகுல்காந்தி சகோதரத்துவத்துவ பாசத்துடன் அவரை கட்டியணைத்து, தோள் மீது கைபோட்டு ஆறுதல் கூறினார். ‛டோன்ட் க்ரே.. டோன்ட் க்ரே’ என ராகுல் காந்தி கூற சிறுமியால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி சிலிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக இந்தியாவில் பிரபல நடிகர்-நடிகைகள், விளையாட்டு வீரர்களை சந்திக்கும்போது ரசிகர்கள் ஆனந்த கண்ணீர் வடிப்பார்கள். ஆனால் இன்று அரசியல்வாதியான ராகுல்காந்தியை பார்த்து சிறுமி ஆனந்த கண்ணீர் வடித்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். செப்டம்பர் 10ம் தேதி கேரளாவில் துவங்கிய நடைப்பயணம் 7 மாவட்டங்கள் வழியாக 450 கிலோமீட்டர் தொலைவை கடந்து அக்டோபர் 1ல் கர்நாடகத்துக்கு செல்ல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.