தமிழக அரசு அதற்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆம்னி பேருந்து கட்டணங்களை முறைப்படுத்த தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரங்களும் உள்ளன. இதை சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை உறுதி செய்திருக்கிறது. அதற்கு பிறகும் தமிழக அரசால் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறுவதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பொதுமக்களிடமிருந்து புகார் வராத அளவுக்கு கட்டணங்களை உயர்த்திக் கொள்ளுங்கள் என்று போக்குவரத்து அமைச்சர் ஆலோசனை வழங்குவதும் நியாயமல்ல.
”ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அவற்றின் உரிமையாளர்களே நிர்ணயித்துக்கொள்ள அனுமதிப்பது சட்ட விரோதமானது” என்று 2016-ம் ஆண்டு நவம்பர் 15-ந்தேதி தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், ”மோட்டார் வாகன சட்டத்தின் 67-வது பிரிவின்படி ஆம்னி பேருந்து கட்டணத்தை தமிழக அரசு தான் நிர்ணயிக்க வேண்டும். கட்டணத்தை எவ்வாறு நிர்ணயிப்பது என்பது குறித்து அரசுக்கு பரிந்துரை அளிக்க உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 5 பேர் குழுவை அமைக்க வேண்டும்” என்றும் ஆணையிட்டது. ஆனால், அத்தீர்ப்பின் மீது 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதற்கு முன்பாக ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பான வழக்கில் 22.06.2016 அன்று தீர்ப்பளித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ”ஆம்னி பேருந்துகள் அரசால் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதம். ஒவ்வொரு ஆம்னி பேருந்திலும் பயணிகளின் பார்வையில் படும் வகையில் பயணக் கட்டண விவரங்கள் எழுதி வைக்கப்பட வேண்டும். அதைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 044-24749001, 044-26744445 ஆகிய எண்களில் அரசிடம் புகார் செய்யலாம். அதன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஆணையிட்டது. ஆனால், அதுவும் செயல்படுத்தப்படவில்லை.
ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை முறைப்படுத்த தமிழக அரசுக்கு மோட்டார் வாகன சட்டமும், சென்னை உயர்நீதிமன்றமும் இவ்வளவு அதிகாரங்களை வழங்கியிருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்தி மக்கள் நலனைக் காப்பது தான் தமிழக அரசின் கடமையாகும். அதற்கு மாறாக, கட்டணக் குறைப்பு தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் அரசு கோரிக்கை வைக்கக் கூடாது. இந்த விஷயத்தில் தமிழக அரசு அதற்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக கடந்த காலங்களில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த அனைத்து ஆணைகளையும் செயல்படுத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.