பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரும் மாற்று பெயரில் செயல்பட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் 24 மாநிலங்களில், பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு கிளைகள் உள்ளன. பல்வேறு கலவரங்கள் மற்றும் படுகொலைகளில் பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியாஅமைப்புக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. இதன் பேரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாட்டிலேயே தடை செய்யக்கூடிய தகுதி உள்ள ஒரே அமைப்பு ஆர்எஸ்எஸ் தான். அந்த அமைப்பிற்கு எந்தவித கொள்கையோ, நோக்கமோ மக்களின் நலன் சார்ந்து இல்லை. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரும் மாற்று பெயரில் செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் மதத்தை தாண்டி மனிதநேயத்துடன் தமிழக மக்கள் இருந்து வருகின்றனர். மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் பிரிக்க ஆர்எஸ்எஸ் அமைப்புகள் மற்றும் பாஜக முயற்சி செய்கின்றன. மதத்தையும், ஜாதியையும் தனது 2 கண்களாக வைத்து பாஜக அரசியல் செய்கிறது.
20,000 புத்தகங்களை படித்ததாக கூறும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீண்டாமை இல்லை என கூறுகிறார். ஆனால் 60 ஆயிரம் புத்தகங்களை படித்த அம்பேத்கர் தீண்டாமை இருக்கிறது என தனது புத்தகத்தில் தெரிவித்து உள்ளார். அதை அண்ணாமலை படிக்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.