மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி டிசம்பருக்குள் கவிழும்: பாஜக

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக, அம்மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் தெரிவித்து உள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஹாட்ரிக் வெற்றி பெற்று முதலமைச்சராக மம்தா பானர்ஜி பதவி ஏற்றுள்ளார். முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும், மத்திய பாஜக அரசுக்கும் இடையே தொடர்ந்து முட்டல் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.இடையே வார்த்தை போர் வெடித்து வருகிறது. பா.ஜ.க. தலைவர்கள் தொடர்ச்சியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். அதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே அந்த மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி ஆசிரியர் பணிநியமன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதேபோல கால்நடை கடத்தல் வழக்கில் கட்சியின் மூத்த தலைவர் அனுப்பிரதா கைது செய்யப்பட்டுள்ளர். இந்நிலையில் நிலக்கரி கடத்தல் ஊழல் வழக்கில் அம்மாநில சட்ட அமைச்சர் மோலோய் கட்டக்கின் வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சி.பி.ஐ. சோதனை நடைபெற்றது. அடுத்தடுத்த கைது, சோதனைகள் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்நிலையில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சுகந்தா மஜூம்தார் மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த மூத்ததலைவரும், பாலிவுட் நடிகருமான மிதுன்சக்கரவர்த்தி ஆகியோர் நேற்று ஹுக்கிளி மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது மாநில தலைவர் சுகந்தா மஜூம்தார் பேசியதாவது:-

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சில அமைச்சர்கள் உள்பட ஒரு சில முக்கிய தலைவர்கள் மட்டுமே குறிப்பிட்ட சில காலத்திற்கு பிறகு சிறைக்கு வெளியே இருப்பார்கள் என்பது தெளிவாகிறது. ஏனென்றால் மீதம் உள்ளவர்கள் உள்ளே இருப்பார்கள். பெரும்பாலான அமைச்சர்கள் ஜெயிலுக்கு சென்று விட்டால் யார் ஆட்சியை நடத்துவார்கள். டிசம்பருக்குள் இப்படி ஒரு நிலை வரும் என்று நாங்கள் இருக்கிறோம். சிறைக்கு செல்லும் அமைச்சர்களில் முதல்வரும் இருப்பாரா என்று தெரியவில்லை. ஒருவேளை முதல்-மந்திரியும் ஜெயிலுக்கு செல்லும் நிலை வரலாம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 41 எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா கட்சியின் உயர்மட்ட குழுவுடன் நேரடியாக தொடர்பில் இருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

நடிகரும், பாஜக தலைவருமான மிதுன் சக்ரவர்த்தி பேசுகையில், “மம்தா பானர்ஜி கட்சியைச் சேர்ந்த 21 ஏம்எல்எக்களுடன் பேசி வருகிறேன். சிறிது காலம் காந்திருங்கள் உரிய நேரம் விரைவில் வரும்” என்றார்.