வன்முறையில் ஏற்பட்ட சேதங்களுக்கு கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் மாநில அரசால் மதிப்பீடு செய்யப்பட்ட இழப்பீடாக ரூ.5.20 கோடியை மாநில அரசிடம் செலுத்துமாறும் பிஎப்ஐ அமைப்பு மற்றும் அதன் மாநில பொதுச் செயலாளருக்கு கேரள உயா் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கடந்த செப். 22-ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை பல்வேறு மாநிலங்களில் பிஎப்ஐ-க்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டது. இச்சோதனையைக் கண்டித்து கேரள மாநிலத்தில் செப். 23-ஆம் தேதி முழு வேலைநிறுத்தப் போராட்டத்தை பிஎப்ஐ அறிவித்தது. வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது மாநிலம் முழுவதும் பரவலாக வன்முறை நிகழ்ந்தது. கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு (கேஎஸ்ஆா்டிசி) சொந்தமான பல பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடா்பாக கேரள உயா் நீதிமன்றத்தில் கேஎஸ்ஆா்டிசி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
முன்கூட்டிய அறிவிப்பின்றி நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டம், உயா் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது. வேலைநிறுத்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்ததில், 58 பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. ஒரு பயணியும் 10 ஊழியா்களும் வன்முறையால் காயமடைந்தனா். ஏற்கெனவே, நிதிச்சுமை உள்ள நிலையில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதாலும், செப். 23-ஆம் தேதி குறைவான பேருந்துகள் இயக்கப்பட்டதன் காரணமாகவும் போக்குவரத்துக்குக் கழகத்துக்கு ரூ. 5 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனவே, பிஎப்ஐ அமைப்பு ரூ.5 கோடியை இழப்பீடாக வழங்க உத்தரவிடவேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியாா், முகமது நியாஸ் சி.பி. ஆகியோா் போக்குவரத்துக் கழகத்துக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடாக ரூ.5.20 கோடியை மாநில அரசுக்கு வழங்கும்படியும், இந்த இழப்பீடுத் தொகை அரசிடம் சமா்ப்பிக்காத வரையில், போராட்ட வன்முறையில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு ஜாமீன் வழங்கப்படாது எனவும் தெரிவித்தனா். மேலும், அமைப்பின் கேரள மாநில முன்னாள் பொதுச் செயலாளா் அப்துல் சத்தாரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த வன்முறை மற்றும் சொத்துகளைச் சேதப்படுத்தல் தொடா்பான குற்றவழக்குகளில் ஒருவராக சோ்க்கப்படுவாா். இழப்பீடு தொகையை உரிய காலத்தில் செலுத்த இயலவில்லை என்றால், பிஎப்ஐ அமைப்பு மற்றும் சத்தாருக்கு சொந்தமான சொத்துகளைக் கைப்பற்றுமாறும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனா்.