தரமற்ற நிறுவனங்களிடம் பொங்கல் பரிசு பொருட்கள்: டிடிவி தினகரன்

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில், முறைகேட்டில் ஈடுபட்ட அதே நிறுவனங்களிடம் இருந்து மீண்டும் பொருட்களை வாங்குவதற்கு முடிவு செய்துள்ள திமுக அரசுக்கு, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின்போது, தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். இந்த பரிசுத்தொகுப்பில், அரிசி, வெல்லம், பருப்பு, ரவா, கோதுமை, வெல்லம், நெய், கரும்பு உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் இடம்பெற்றிருக்கும்.

இந்நிலையில், சென்ற ஆண்டு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள பொருட்கள் தரமற்று இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான புகார்கள், முதலமைச்சரின் கவனத்திற்கு சென்று விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. பொங்கல் பண்டிகையின்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகுப்பில் தரமற்ற உணவுப் பொருட்களை விநியோகம் செய்த தனியார் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்திருந்தார். அதன்படி, தரமற்ற பொருட்களை விநியோகம் செய்த சம்மந்தப்பட்ட அந்த நிறுவனங்களுக்கு அபராம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தரத்தை ஆய்வு செய்வதில் மெத்தனமாக இருந்த அதிகாரிகள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த பொங்கல் பண்டிக்கையின்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்களை விநியோகம் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்ட அதே நிறுவனங்களிடம் மீண்டும் பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான பொருட்களை வழங்கியதில், முறைகேட்டில் ஈடுபட்ட அதே நிறுவனங்களிடம் இருந்து மீண்டும் பொருட்களை வாங்க முடிவு செய்துள்ள திமுக அரசுக்கு, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டு, அபராதம் விதிக்கப்பட்ட அதே நிறுவனங்களிடமிருந்து நியாய விலைக் கடைகளுக்காக பருப்பு மற்றும் எண்ணெய் வாங்குவதற்கு முடிவு செய்துள்ள திமுக அரசுக்கு கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தரமற்ற பொங்கல் பரிசை மக்களுக்கு அளித்த நிறுவனங்கள் மீது முதலமைச்சர் திரு. ஸ்டாலின் எடுப்பதாக சொன்ன கடும் நடவடிக்கை இதுதானா? இப்படி பச்சையாக முறைகேட்டில் ஈடுபடுபவர்களை ஊக்குவித்துக்கொண்டே ஊருக்கு ஊர், மேடைக்கு மேடை, ‘நாங்கள் மட்டுமே உத்தமர்கள்’ என ஆட்சியாளர்கள் மார்தட்டிக் கொள்கிறார்கள். இவ்வாறு டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.