சிறையில் உண்ணாவிரதம்: சவுக்கு சங்கரின் தாயார் முதல்வருக்கு கடிதம்!

சவுக்கு சங்கரின் தாயார் கமலா முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார். அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தனது மகன் பழிவாங்கப்படுவதாக குற்றச்சாட்ட வைத்துள்ளார்.

லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றி வந்த சவுக்கு சங்கர் கடந்த 2008 அரசு ஆவணங்களை கசியவிட்டதாகவும், போன் உரையாடல்களை கசியவிட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் இவரை மொத்தமாக பணியில் இருந்து நீக்காத நிலையில், அது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால் அவருக்கு மாதம் 40 ஆயிரம் ரூபாய்க்கு அரசு ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். தீர்ப்பை விமர்சனம் செய்தது மட்டுமின்றி தனிப்பட்ட வகையில் நீதிபதி ஒருவரையும் விமர்சனம் செய்து பேசி இருந்தார். இதையடுத்து மதுரை உயர் நீதிமன்றத்தில், இவருக்கு எதிராக நீதிபதி ஜி. ஆர் சுவாமிநாதன் தாமாக முன் வந்து அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது.

சவுக்கு சங்கர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை சென்றதால் அவர் லஞ்ச ஒழிப்புத்துறை பணியில் இருந்து மொத்தமாக நீக்கப்பட்டார். அதோடு கடலூர் சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் பார்வையாளர்களை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சவுக்கு சங்கர் தற்போது சிறையில் உண்ணாவிரதம் இருப்பதாக கூறப்படுகிறது. தன்னை பார்க்க யாரும் அனுமதிக்கப்பட வில்லை என்று கோபத்தில் அவர் உண்ணாவிரதம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், சவுக்கு சங்கரின் தாயார் கமலா முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார். அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தனது மகன் பழிவாங்கப்படுவதாக குற்றச்சாட்ட வைத்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு என்ற பெயரில் எனது மகன் சங்கர் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு கொடுத்த தீர்ப்பால் ஆறு மாதம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதை செய்திகளின் வாயிலாக அறிந்து கொண்டேன். மதுரை சிறையில் சங்கரை வைப்பதாக நீதிமன்ற தீர்ப்பு கூறியிருந்த போதிலும், இரவோடு இரவாக சங்கரை கடலூர் சிறைக்கு மாற்றியுள்ளனர். இது தொடர்பாக எனக்கோ அல்லது என் குடும்ப உறுப்பினர்களுக்கு எந்த தகவலும் இந்நாள் வரை தெரிவிக்கப்படவில்லை.

சங்கரை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுக்கு நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன். இந்நாள் வரை அது பற்றியும் எனக்கு எந்தவிதமான பதிலும் தெரிவிக்கப்படவில்லை. என்னுடைய வயோதிக காலத்தில் எனக்கு உடல் நலப் பிரச்சினைகளும் இருப்பதினால் நான் எனது மகன் சங்கரை கடலூர் சிறைக்கு சென்று பார்க்க முடியாத நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது மகன் சங்கர் லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றும்போது அவர் மீது சில குற்றச்சாட்டுகளை சுமத்தி இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்டார். அது சம்மந்தமான குற்ற வழக்கில் அவர் நீதிமன்றத்தால் போதிய ஆதாரங்கள் இல்லை என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

இப்பொழுது மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய அவமதிப்பு வழக்கின் தீர்ப்பை காரணம் காட்டி எனது மகனை லஞ்ச ஒழிப்பு துறையில் பணியில் இருந்து அவசர அவசரமாக நீக்கப்பட்டுள்ளார் என்பதையும் செய்திதாள்கள் மற்றும் ஊடகங்கள் வழியாகவே தெரிந்து கொண்டேன். இது குறித்து இன்றுவரை எனக்கோ எனது குடும்ப உறுப்பினர்களுக்கோ இந்நாள் வரை மேற்கண்ட எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
மேலும் சங்கருக்கு கொடுக்கப்பட்ட ஏன் தங்களை பணியிலிருந்து நீக்கம் செய்யக்கூடாது என்ற நோட்டீசை அவர் வாங்க மறுத்துவிட்டார் என்ற காரணத்தைக் காட்டி கடலூர் சிறை அதிகாரி எனது மகன் சங்கரை யாரும் ஒரு மாதகாலம் சந்திக்கக் கூடாது என்று தண்டனை கொடுத்திருப்பதாக அதனையும் செய்திகளின் வாயிலாக நான் அறிந்து கொண்டேன்.

சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் எனது மகனிடம் எந்த விதமான சட்ட உதவிகளை கூட நாட முடியாத ஒரு சூழலில் அவரிடம் விளக்கம் கேட்டு லஞ்ச ஒழிப்பு துறையினர் பணிநீக்கம் தொடர்பான நோட்டீசை வழங்க முயற்சி செய்திருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனது மகன் சங்கர் பல அரசியல் விவாதங்களில் கலந்து கொண்டு சமூகம், அரசியல், ஊழல் தொடர்பான பல்வேறு கருத்துகளை பேசி வந்துள்ளார். எனது மகன் சங்கர் வெளியிடக்கூடிய கருத்துக்கள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருவதாலும் சங்கருக்கான ஆதரவாளர்கள் தளம் அதிகரித்து வருவதாலும் சங்கரை பழிவாங்க வேண்டும் என்று பலர் தொடர்ந்து முயற்சித்து வருவதை ஒரு தாயாக நான் அறிவேன்.

கடந்த காலங்களில் சங்கரை பல பொய் வழக்குகளில் சிக்கவைத்து சிறைக்கு அனுப்பியதும், தொடர்ந்து சங்கர் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் பல முயற்சிகள் நடந்துள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அவருக்கு நீதிமன்ற அவமதிப்பு என்ற பெயரில் கொடுக்கப்பட்டிருக்கக் கூடிய தண்டனையும் அந்த தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்பளிக்காத வகையிலும் சட்ட உதவிகளை நாட முடியாத ஒரு சூழலை உருவாக்கி ஒரு தாயாக நான் கூட சந்திக்க முடியாத சூழ்நிலையில் எனது மகன் தள்ளப்பட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்தது. எனது மகன் சங்கருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை என்பது இயற்கை நீதிக்கு முரணானது என்று பல அரசியல் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் அவரவர் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். சிறையில் எனது மகன் சங்கர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முடிவு செய்துள்ளார் என்று அவரை சிறையில் சந்தித்த வழக்கறிஞர் ஊடகங்களில் தெரிவித்திருக்கிறார்கள். அரசாங்கம் எனது மகன் சவுக்கு சங்கரை அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் நோக்கத்துடனும் செயல்பட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தலையிட்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சவுக்கு சங்கர் பார்வையாளர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தம்பி சவுக்கு சங்கர் அவர்களது பார்வையாளர் சந்திப்புக்கு ஒருமாத காலம் அனுமதி மறுத்திருக்கும் திமுக அரசின் செயல் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். மிகக்கொடிய குற்றங்களில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகள் உட்பட அனைத்து சிறைவாசிகளுக்குமான அடிப்படை உரிமையாகச் சட்டமும், ஜனநாயக அமைப்பு முறைகளும் வழங்கியிருக்கிற பார்வையாளர் சந்திப்புக்குத் தடைவிதிப்பது என்பது ஏற்கவே முடியாத கொடுங்கோன்மையாகும்.

அதிகமான பார்வையாளர்கள் வருகிறார்கள் என்பதைக் காரணமாகக் காட்டி, அவருக்கான பார்வையாளர் சந்திப்பையே முற்றாக ரத்து செய்வது எந்த வகையில் நியாயமாகும்? பார்வையாளர்களுக்கான அனுமதியை முறைப்படுத்தி, சிறைத்துறை விதிகளின்படி சந்திப்புக்கு வழியேற்படுத்த வேண்டுமே ஒழிய, மொத்தமாகச் சந்திப்புக்கே அனுமதியில்லை என அறிவிப்பது மிக மோசமான நிர்வாகச் செயல்பாடு.

கருத்துச் சுதந்திரம், தனிமனித உரிமை, ஜனநாயக மாண்பு, சமூகநீதி எனப் பேசும் திமுக அரசு, தனது ஆட்சியின் ஊழல்களையும், முறைகேடுகளையும் விமர்சித்தார் என்பதற்காகவே சவுக்கு சங்கரைப் பழிவாங்கும் நோக்கோடு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. ஆகவே, சவுக்கு சங்கரின் பார்வையாளர் சந்திப்புக்கு விதிக்கப்பட்டிருக்கிற ஒரு மாத காலத்தடையை நீக்கி, பார்வையாளர் சந்திப்புக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.