டெல்லி பிரகதி மைதானத்தில் நடந்த 6-வது இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றையான 5ஜி சேவையை தொடங்கி வைத்தார்.
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5ஜி சேவையை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
21ம் நூற்றாண்டில் வேகமாக வளரும் இந்தியாவுக்கு இன்று சிறப்பான நாள். 130 கோடி இந்தியர்கள் தொலைத்தொடர்புத் துறையிலிருந்தும் 5ஜி வடிவில் அற்புதமான பரிசைப் பெறுகிறார்கள். 5ஜி ஒரு புதிய சகாப்தத்தின் கதவுகளைத் தட்டுகிறது. 5ஜி எல்லையற்ற வாய்ப்புகளின் தொடக்கம். 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி தொழில்நுட்பங்களுக்காக இந்தியா மற்ற நாடுகளைச் சார்ந்து இருந்தது. ஆனால் 5ஜி மூலம் இந்தியா முதல் முறையாக தொலைதொடர்பு தொழில்நுட்பத்தை உலக தரத்தைப் பெற்றுள்ளது. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் என்பது வெறும் பெயரல்ல, அது நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு பெரிய தொலைநோக்கு பார்வை. தொழில்நுட்பத்தை சாமானிய மக்களிடம் கொண்டு செல்வதே இந்த தொலைநோக்குப் பார்வையின் குறிக்கோள்.
2014 ஆண்டில் மொபைல் போன்களை ஏற்றுமதி செய்யாத நாம், இன்று ஆயிரக்கணக்கான மொபைல் போன்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளோம். தற்போது நாடு முழுவதும் 1.7 லட்சம் பஞ்சாயத்துகள் ஆப்டிகல் பைபர் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. தொழில்துறைக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டன. 4ஜி தொழில் நுட்ப தரவுகளின் விலை உலகிலேயே இந்தியாவில் மிக குறைவு. ஒரு ஜி.பி. 300 ரூபாயில் இருந்து10 ரூபாயாக குறைந்தது. சில உயர் வகுப்பினர், ஏழைகள் டிஜிட்டலின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வார்களா என்று கேள்வி எழுப்பினர். தற்போது புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அவர்கள் தயாராக இருக்கின்றனர். நாங்கள் பெரிய விளம்பரங்களை வெளியிடவில்லை. நாட்டு மக்களின் வாழ்க்கைக்கான வசதியை எவ்வாறு அதிகரிப்பது என்பதில் நாங்கள் கவனம் செலுத்தினோம். முதல் மூன்று தொழில் புரட்சிகளால் இந்தியா பயனடையாமல் இருக்கலாம், ஆனால் 4வது தொழிற்புரட்சியின் முழுப் பலனையும் இந்தியா பெறும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், இன்னும் 6 மாதங்களில் நாட்டில் உள்ள 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்படும் என்றார். அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் 90 சதவீத இடங்களில் 5ஜி சேவை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் பிஎஸ்என்எல் மூலம் 5ஜி சேவை வழங்கப்படும் என்றும், குறைந்த விலையில் 5ஜி சேவை கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.