தமிழகம்-கேரளாவில் இந்து அமைப்புகளின் தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாக மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த 2 மாநிலங்களிலும் இந்து இயக்க தலைவர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் செல்லும் இடங்களில் உஷாராக இருக்க போலீசார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகம், கேரளா உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தமிழகம், கேரளாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் இன்று நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க கோரி ஐகோர்ட்டு அறிவுறுத்தி இருந்த நிலையிலும், போலீசார் அதற்கு அனுமதி மறுத்திருந்தனர். இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு கோர்ட்டு அவமதிப்பு மனு, போலீசார் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனு ஆகியவற்றை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நவம்பர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்த அறிவுறுத்தியுள்ளது. இந்த ஊர்வலத்துக்கு வருகிற 31-ந்தேதிக்குள் தமிழக காவல்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து நவம்பர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அந்த அமைப்பினர் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில்தான் கேரளாவில் 5 ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டிருப்பதுடன் தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உஷாராக இருக்க அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெறும் வரை போலீசார் உஷாராக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் 5 பேரின் பெயர் பட்டியலை கொடுத்து அவர்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவு பிரிவினர் எச்சரித்து உள்ளனர். இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட அந்த தலைவர்களுக்கும் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.)யை சேர்ந்த கமாண்டோ வீரர்கள் 5 தலைவர்களுக்கும் பாதுகாப்பு அளிப்பார்கள். 2 அல்லது 3 கமாண்டோ பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 2 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள். இவர்களில் தலைமை பொறுப்பில் உள்ள 4 நிர்வாகிகளும் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போன்று இந்து இயக்கங்களில் தீவிரமாக செயலாற்றி வரும் முன்னணி நிர்வாகிகளும் வெளியில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் வெளியில் செல்லும் போது தங்களது பாதுகாப்பு விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் வேகமாக செயல்படும் இந்து இயக்க நிர்வாகிகள் யார்-யார் என்பதை கண்டறிந்து அவர்கள் வீடுகள் மற்றும் அவர்கள் செல்லும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உளவு பிரிவு போலீசார் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.