ரஷ்ய படையிடம் இருந்து உக்ரைனின் முக்கிய நகரை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரில் உக்ரைன் நாட்டு நகரங்களை ரஷ்யா படைகள் கைப்பற்றின. இதற்கிடையே போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் ரஷ்ய படையிடம் இருந்து உக்ரைனின் முக்கிய நகரை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.
உக்ரைனின் கிழக்கில் உள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள லைமன் நகரை தளவாட மற்றும் போக்குவரத்து மையமாக ரஷ்யா பயன்படுத்தி வந்தது. ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களில் டொனெட்ஸ்க்கும் ஒன்றாகும். அந்த நகரை மீட்க உக்ரைன் படையினர் தொடர்ந்து சண்டையிட்டனர். அந்த நகரை உக்ரைன் ராணுவத்தினர் சுற்றி வளைத்ததால் அங்கிருந்து ரஷ்ய படைகள் பின் வாங்கின. அங்குள்ள லைமனை உக்ரைன் படை மீட்டுள்ளது ரஷ்யாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேற்று கூறுகையில், “மதியம் 12:30 நிலவரப்படி, லைமன் பகுதி ரஷ்ய துருப்புக்களிடமிருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டது. எங்கள் ராணுவத்திற்கு மிக்க நன்றி!” என்று கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், வன்முறை சூழலை நிறுத்தும்படி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கிறிஸ்தவ மதத்தின் கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்தாலியின் ரோம் நகரில் புனித பீட்டர் சதுர்க்கத்தில் மத வழிபாட்டிற்காக கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய போப் பிரான்சிஸ், உக்ரைனில் நிகழும் வன்முறை மற்றும் மரண சூழலை நிறுத்தும்படி நிறுத்தும்படி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கேட்டுக்கொள்கிறேன். அணு ஆயுத யுத்த ஆபத்தை அபத்தமானது என அவர் கூறினார். தீவிர அமைதி ஒப்பந்தத்திற்கு திறந்த நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி முன் வர வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்தார்.