மாணவி தற்கொலை முயற்சி, கல்லூரி முதல்வர் மீது வழக்கு!

மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் மீது பெண் வன்கொடுமை, தகாத வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குட்டி, விவசாயி. இவரது மகள் சர்மி பிரமிளா (வயது 19). இவர் முன்னீர்பள்ளம் பகுதியில் உள்ள பி.எஸ்.என். என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவி கல்லூரி விடுதியில் தங்கி வகுப்புக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவி திடீரென கல்லூரி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேரன்மகாதேவி டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன், முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கல்லூரி முதல்வர் அவதூறாக தகாத வார்த்தைகளால் திட்டியதால் மாணவி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கல்லூரி முதல்வர் ரவிக்குமார் மீது பெண் வன்கொடுமை, தகாத வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக சிகிச்சை பெற்று வரும் மாணவி நிருபர்களிடம் கூறியதாவது:

பிளஸ்-2 வில் அதிக மதிப்பெண் எடுத்ததால் குறைந்த கட்டணத்தில் எனக்கு பி.எஸ்.என். கல்லூரியில் இடம் வழங்கினர். ஆனால் முதல் செமஸ்டர் முடிந்த பின்னர் என்னிடம் கட்டணம் கட்டச் சொல்லி வற்புறுத்தினர். முதல்வரின் உதவியாளர் என்னை அடிக்கடி பின்தொடர்ந்து வந்தார். மேலும் அவருடன் பேசினால் கட்டணம் செலுத்த வேண்டாம் எனவும் கூறினார். இதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். இதனால் எனது சக மாணவர்களுடன் பேசியதை தவறுதலாக சித்தரித்து கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தார். சம்பவத்தன்று இது தொடர்பாக முதல்வர் அறையில் 45 நிமிடங்கள் என்னை நிற்க வைத்து அவதூறாக தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனால் மனம் உடைந்த நான், மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

அவரது தந்தை கூறும்போது, கட்டணம் இல்லாமல் படித்து வருவதை கல்லூரி முதல்வர் ஏளனமாக பேசி, தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக எங்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என தெரிவித்தார்.