அமெரிக்காவில் இந்திய குடும்பத்தை கடத்தியவர் தற்கொலை முயற்சி!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பமே கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் இப்போது முக்கிய திருப்பம் அரங்கேறி உள்ளது

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த திங்கள்கிழமை துப்பாக்கி முனையில் சீக்கிய குடும்பம் கடத்தப்பட்டது. 8 மாத குழந்தை உட்பட குடும்பத்தைச் சேர்ந்த பலரும் கடத்தப்பட்டதால் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்தியக் குடும்பத்தைக் கடத்திய நபரை கலிபோர்னியா போலீசார் இன்று அடையாளம் கண்டு உள்ளனர். குற்றவாளியைப் பிடிக்க முயலும்போது அந்த நபர் திடீரென தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். தற்கொலை முயற்சி அந்த குற்றவாளி கடத்தப்பட்ட நபர்களில் ஒருவரது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்த முயன்று உள்ளார். அப்போது தான் போலீசார் அவரை அடையாளம் கண்டு உள்ளனர்.

இந்தியக் குடும்பத்தைக் கடத்திய அந்த நபர் 48 வயதான ஜீசஸ் சல்காடோ என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது. குற்றவாளிக்குப் பிடிக்க முயன்ற போது, திடீரென அவர் தற்கொலை முயன்றாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கடத்தப்பட்ட இந்தியக் குடும்பத்தினர் நால்வரும் அப்பகுதியில் பெட்ரோல் நிலையம் மற்றும் மளிகைக் கடையை நடத்தி வந்து உள்ளனர். அங்கிருந்து அவர்கள் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மெர்சட் என்ற ஊரில் இருந்து இந்தியக் குடும்பத்தினர் கடத்தப்பட்டனர். அந்த ஊரில் இருந்து 14 கிமீ தொலைவில் இருந்த மற்றொரு ஏடிஎமில் இருந்து இன்று குற்றவாளி பணம் எடுக்க முயன்றுள்ளான். அப்போது தான் போலீசார் அவனைக் கண்டுபிடித்து உள்ளனர். மீட்கப்படவில்லை இரு இடங்களில் கிடைத்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஒப்பிட்டுப் பார்த்ததில், அவர் தான் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. தற்போது மருத்துவமனையில் அந்த குற்றவாளி அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், இது தொடர்பாகக் கூடுதல் தகவல்களை மிக விரைவில் மெர்சட் போலீசார் அறிவிக்க உள்ளனர். குற்றவாளியை போலீசார் பிடித்துவிட்ட போதிலும், இதுவரை கட்டத்தப்பட்ட குடும்பத்தினர் மீட்கப்படவில்லை.

கடந்த திங்கள்கிழமை கடையில் அத்துமீறி நுழைந்த கடத்தல்காரன் துப்பாக்கி முனையில் முதலில் குழந்தையைக் கடத்தியுள்ளான். பின்னர், குழந்தையின் தாய் ஜஸ்லீன் கவுர் (27), தந்தை ஜஸ்தீப் சிங் (36), உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோரை கடத்தி உள்ளான். கடத்தல்காரரிடம் இருந்து பணம் உள்ளிட்ட எவ்வித கோரிக்கையும் வரவில்லை என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும், ஆதாரங்களையும் அழிக்க முயன்றதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். கடத்தல் நடந்த திங்கள்கிழமை அமன்தீப் சிங்கிற்கு சொந்தமான பிக்கப் டிரக் தீப்பிடித்து எரிந்து உள்ளது. இது தொடர்பாக மெர்ஸ்டு காவல் துறை அதிகாரிகள் அமன்தீப் சிங்கின் வீட்டிற்குச் சென்றனர். அப்போது அவரது குடும்ப உறுப்பினர்கள் அமன்தீப் சிங்கை தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். இருப்பினும், குடும்பத்தினரால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், அப்போது தான் இந்த கடத்தல் சம்பவம் தெரிய வந்து உள்ளது.