2022ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி 2022 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. அதில், அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 2022-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டுக்கான இயற்பியல் பரிசை 3 பேர் பெறுகின்றனர். அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப். கிளாசர், அன்டன் ஜெய்லிஙர் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. குவாண்டம் தகவல் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்படுவதாக தேர்வுக்குழு இன்று அறிவித்துள்ளது. இதன்படி இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு “மூலக்கூறுகளை ஒன்றிணைக்கும்” வழியை உருவாக்கியதற்காக கரோலின் ஆர். பெர்டோசி (அமெரிக்கா), மோர்டன் மெல்டல் (டென்மார்க்) மற்றும் கே. பேரி ஷார்ப்லெஸ் (அமெரிக்கா) ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு நாளயும், அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு திங்கட்கிழமையும் அறிவிக்கப்பட உள்ளது.