திருப்பூர் ஆசிரமத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 மாணவர்கள் பலி!

திருப்பூர் ஆசிரமத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 மாணவர்கள் பலியாகினர். மயங்கிய 12 குழந்தைகளுக்கு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர்-அவினாசி ரோடு திருமுருகன்பூண்டி ரிங்க்ரோடு பகுதியில் ஸ்ரீவிவேகானந்தர் குழந்தைகள் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி உள்ளனர். இங்கு தங்கி இருக்கும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்தையும் ஆசிரம நிர்வாகத்தினரே செய்து கொடுக்கின்றனர். இங்கு தங்கி இருக்கும் மாணவர்கள் அனைவரும் அருகே உள்ள பள்ளிகளில் தங்கி படித்து வருகின்றனர். தற்போது ஆயுத பூஜை விடுமுறை என்பதால் அங்கு தங்கியிருந்த மாணவர்களில் பெரும்பாலோனார் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். 15 மாணவர்கள் மட்டுமே ஆசிரமத்தில் தங்கி இருந்தனர்.

இன்று காலை 15 மாணவர்களையும் காப்பகத்தில் உள்ள பணியாளர்கள் காலை உணவு சாப்பிடுவதற்கு அழைத்தனர். பின்னர் குழந்தைகள் அனைவரும் அமர்ந்து சாப்பிட்டனர். அதனை தொடர்ந்து குழந்தைகள் ஆசிரமத்தில் விளையாடுவதற்கு சென்றனர். அப்போது ஒவ்வொரு மாணவராக, திடீர் திடீரென மயங்கி விழ தொடங்கினர். இதனை பார்த்ததும், ஆசிரமத்தில் இருந்த பணியாளர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஆசிரம நிர்வாகிகளுக்கும் தகவல் கொடுத்தனர். அவர்களும் விரைந்து வந்து மயங்கி விழுந்த குழந்தைகளை மீட்டு அருகே உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு தங்கி இருந்த பாபு(வயது10), ஆத்திஸ்(8), மாதேஷ்(14) ஆகிய 3 பேரும் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

இதுகுறித்து தகவல் கிடைக்கப்பெற்றதும் திருமுருகன்பூண்டி போலீசார் ஆசிரமத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இறந்த குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் மயங்கிய 12 குழந்தைகளையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் இது தொடர்பாக ஆசிரம நிர்வாகிகளிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பிறகு நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

இந்த நிலையில், திருப்பூரில் காப்பக குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் அம்மாவட்ட கலெக்டர் வினீத் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், காப்பகத்தில் நேற்று இரவு உணவு சாப்பிட்ட 14 சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். விடுதியில் வழங்கப்பட்ட உணவு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் தான் சிறுவர்கள் இறப்புக்கான காரணம் தெரியும் என்று கூறினார். அது போல் திருப்பூர் மாவட்ட காவல் துறை ஆணையர் பிரபாகரனும் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு 3 குழுக்களை அமைத்துள்ளது. சமூகநலத்துறை சார்பில் ஒரு குழுவும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இரு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட குழந்தைகள் நல குழும அதிகாரி ரஞ்சித பிரியா தலைமையிலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சமூக பாதுகாப்பு துறை இயக்குநர் வளர்மதி ஐஏஎஸ் தலைமையிலான குழு விடுதியில் விசாரணை நடத்தி வருகிறது. வளர்மதி தலைமையிலான குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை என அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவிட்டுள்ளார்.