சீன, இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இலங்கையில் அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே, 2009-ல் நடந்த இறுதிக் கட்ட போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார் எழுந்தது. ‘இது தொடர்பாக, இலங்கைக்கு எதிராக இனப் படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என, ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கடந்த 2012 – 2014 ல், அப்போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே ஆட்சியின்போது, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், அந்த தீர்மானங்கள் இரண்டு முறை தோல்வி அடைந்தன. இந்த நிலையில் தற்போது ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட போர்க்குற்ற தீர்மானம் மீது வாக்களிக்காமல் இந்தியா புறக்கணிப்பு செய்தது. இந்த வரைவுத் தீர்மானத்திற்கு இந்தியா, ஜப்பான், நேபாளம் மற்றும் கத்தார் உள்பட 20 நாடுகள் ஆதரவளிக்காமல் புறக்கணித்தன. சீனா, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. எனினும், தீர்மானத்திற்கு ஆதரவாக இங்கிலாந்து, அமெரிக்கா, அர்ஜென்டினா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, மெக்சிகோ, நெதர்லாந்து, பராகுவே, போலந்து, கொரியா குடியரசு மற்றும் உக்ரைன் ஆகிய 20 நாடுகள் வாக்களித்தன.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட போர்க்குற்ற தீர்மானம் வெற்றிகரமாக நேற்று நிறைவேற்றம் செய்யப்பட்டது. இதன்முலம்,’இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ தொடர்பான வரைவுத் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது. தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை விசாரித்து அதற்கு காரணமானவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று தீர்மானத்தில் உள்ள முக்கிய அம்சம் ஆகும். இந்நிலையில், இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க உறுதுணையாக இருப்போம் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இந்தியா உறுதியளித்துள்ளது. அதேபோல, சீனாவுக்கு எதிரான மனித உரிமை மீறல் குறித்த தீர்மானம் மீது வாக்களிக்காமல் இந்தியா புறக்கணிப்பு செய்தது.

சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது ஜின் ஜியாங் மாகாணம். இயற்கை வளம் நிறைந்த இந்த மாகாணத்தில் 20 ஆம் நூற்றாண்டில் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்ட ஜின் ஜியாங் மாகாணத்தை 1949 ஆம் ஆண்டு முதல் சீனா தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த மாகாணத்தில் உய்குர் இனத்தை சேர்ந்த முஸ்லீம்கள் சுமார் 1.2 கோடி பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கு எதிராக சீனா கடும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மறு கல்வி முகாம்கள் என்ற பெயரில் அங்குள்ள மக்களின் விருப்பத்தை மீறி சட்டவிரோதமாக ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்களை தடுப்புக்காவலில் வைத்திருப்பதாக சீனா மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

சீன ராணுவத்தை எதிர்த்து உய்குர் இன மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதால் இந்த அடக்குமுறைகள் கையாளப்படுவதாக சொல்லப்படுகிறது. இதுபோக, உய்குர் இன மக்கள் பெரும்பான்மையாக இருப்பதை குறைக்கும் வகையில், ஹன் இன மக்களை அதிக அளவில் ஜின் ஜியாங் மாகாணத்தில் குடியமர்த்துவதாக கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் சீனா ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதுபோக கடந்த மாதம் ஐநா மனித உரிமை ஆணையம் சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பரபரப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தது. அதில், மறுகல்வி முகாம்கள் என்ற பெயரில் உய்குர் முஸ்லீம்கள் சித்ரவதை செய்யப்படுவதாகவும் உடல் உறுப்புகள் திருடப்படுகிறது, இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்று பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தது. ஆனால், இதை சீனா திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.

இந்த நிலையில், ஜின் ஜியாங் மாகாணத்தில் உள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா மனித உரிமை கவுன்சிலில் வரைவு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஜின் ஜியாங் மாகாணத்தில் காணப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரும் இந்த தீர்மானத்தை கனடா, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு கொண்டு வந்தது. 47 உறுப்பினர்களை கொண்ட இந்த கவுன்சிலில், தீர்மானத்திற்கு ஆதரவாக 17 உறுப்பினர்களூம் எதிர்ப்பு தெரிவித்து 19 நாடுகளும் வாக்களித்தன. இதனால், தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. இந்தியா, பிரேசில், மெக்சிகோ, உக்ரைன் உள்ளிட்ட 11 நாடுகள் தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் நிராகரித்தன.