புதின் கூறுவதை நம்மால் சாதாரண ஜோக்காக நினைத்து விட முடியாது: ஜோ பைடன்!

உக்ரைன் போர் பல மாதங்களாகத் தொடரும் நிலையில், அணு ஆயுத போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ள கருத்துகள் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

உக்ரைன் நாட்டில் நடைபெற்று வரும் போரால் ரஷ்யா மற்றும் உக்ரைன் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சிக்குப் பலனில்லை. அமெரிக்கா, இந்தியா என பல்வேறு நாடுகளும் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திய போதிலும், போர் இன்னும் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. இந்தச் சூழலில் அணு ஆயுதங்கள் குறித்த தகவல் பகீர் கிளப்பி உள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற ஜனநாயக கட்சியின் நிதி திரட்டும் விழா நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பைடன், பனிப்போருக்குப் பின் முதன்முறையாக உலகம் அணு ஆயுத போர் ஆபத்தில் உள்ளதாகவும் உக்ரைன் போரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் திட்டத்தைக் கண்டுபிடிக்க முயல்வதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

கடந்த 1962ஆம் ஆண்டுக்குப் பின்னர், அமெரிக்கா ஒருபோதும் ஆணு ஆயுத சிக்கலை எதிர்கொண்டதில்லை என்றும் அவர் தெரிவித்தார். உக்ரைன் போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதாக புதின் சொல்வதை நம்மால் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். பொதுவாகக் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் பேசும்போது, பைடன் இப்படிப் பேசமாட்டார். ஆனால், கட்சி சார்பிலான நிகழ்ச்சியில் அவர் இப்படி வலுவான கருத்துக்களைக் கூறியது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

கியூபாவில் ரஷ்யாவுக்குச் சொந்தமான அணு ஆயுத ஏவுகணைகள் நிறைத்து வைக்கப்பட்டு உள்ளன. அங்கிருந்து அமெரிக்கா மீது ரஷ்யாவால் எப்போது வேண்டுமானாலும் ஏவுகணை தாக்குதல் நடத்த முடியும். கியூபா நெருக்கடி 1962ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதல்முறையாக அமெரிக்கா உண்மையான அணு ஆயுத பிரச்சினையை எதிர்கொண்டு இருக்கிறது என்றும், இதை எதிர்கொள்ளவும் பிரச்சினையைத் தீர்க்கும் தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

உக்ரைன் போரில் தனக்கு வேறு எந்தவொரு ஆப்ஷனும் இல்லை என்றால் ஆணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்று புதின் மறைமுகமாகக் கூறி இருந்தார். புதின் இப்படி ஆணு ஆயுதத்தைப் பயன்படுத்த வாய்ப்பு இல்லை என்றும் அப்படியே பயன்படுத்தினாலும் அது சிறிய அளவில் பெரிய பாதிப்பு இல்லாமலேயே இருக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், அதுவும் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று பைடன் எச்சரித்து உள்ளார்.

இது குறித்து பைடன் மேலும் கூறுகையில், “புதின் குறித்து நமக்கு நன்றாகவே தெரியும். புதின் கூறுவதை நம்மால் சாதாரண ஜோக்காக நினைத்து விட முடியாது. புதின் எதிர்பார்த்ததை காட்டிலும் ரஷ்ய ராணுவம் மோசமாகவே செயல்பட்டு வருகிறது. எனவே, எப்படியாவது போரில் வெல்ல வேண்டும் என்பதற்காக புதின் அணு ஆயுதங்கள், உயிரியல் அல்லது இரசாயன ஆயுதங்கள் பக்கம் திரும்பக் கூடும். எனவே இதை நாம் ஜாக்கிரதைகவே கையாள வேண்டும்” என்றார்.