அதிமுக பிஜேபியுடன் கைகோர்த்து போவதை கைவிடுங்கள்: திருமாவளவன்!

எம்.ஜி.ஆர் மீதும், மோடியா? லேடியா? என சவால் விட்ட ஜெயலலிதா மீது மதிப்பு வைத்தால் அதிமுக பாஜகவை கைவிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

கோவை சிவானந்த காலனி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மணிவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருமாவளவன், ப.சிதம்பரம், செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-

காந்தியடிகளின் கருத்துகளின் அரசியல் முரண்பாடுகளை துணிச்சலுடன் பேசியவர் சிதம்பரம். காந்தியடிகளை குறைத்து மதிப்பிடவில்லை அவர். தேச தந்தை காந்திக்கும், அம்பேத்கருக்கும் இடையிலான கருத்தியல் மோதல் இது. இன்று மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதற்கு நாம் சங்கிகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இந்துக்களின் நம்பிக்கை யாரும் கொச்சைபடுத்தவில்லை. இந்துகளுக்கு எதிராக திசை திருப்பி வைப்பது மட்டுமின்றி எதிரிகளாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். அரசியல் ஆதாயத்திற்காக இந்து மதத்தை பயன்படுத்துகிறார்கள். இந்து மதத்தை காக்க நினைக்கும் மாடாதிபதிகள் ஆர்.எஸ்.எஸ் , பாஜகவினரை அழைத்து செவில் மீது அறைய வேண்டும் ஆர்.எஸ்.எஸ் , பிஜேபியும் மத வழி தேசியத்தை வடிவமைக்க முயற்சிக்கின்றனர்.

காந்தியை சிறுமைபடுத்தி பார்க்க பட்டேலுக்கு சிலை வைக்கிறார்கள்.காந்தியை வணங்குகிறார்கள், கோட்சேவிற்கும் வீர வணக்கம் போடுகிறார்கள்! என்னவொரு நடிப்பு. கருத்தியல் ரீதியாக ஒரே எதிரியாக இருப்பவர் அம்பேத்கர் தான். அவர்கள் நினைப்பதை செயல்படுத்த முடியாமல் தடையாக இருப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அதை வடிவமைத்தவர் அம்பேத்கர். இந்தியாவில் இரண்டு இனம் தான். ஒன்று ஆரியன், மற்றொன்று திராவிடன்.

மோகன் பகவத் சாதியும் மதமும் மறந்துவிடு என்கிறார். மதமும் , சாதியும் மறந்து விடுவதல்ல, வேரோடு அழித்து எரிய வேண்டும். தமிழிசை அக்காவை , பொன்னாரை சங்கர மடத்தில் உட்கார வைக்க முடியுமா? சாதியும் மதமும் இல்லை என எப்படி சொல்ல முடிகிறது. ஒரே ஒரு நாள் விவசாயியாகவும், செருப்பு தைப்பவராகவும், மீன் பிடிப்பவராகவும் முடியுமா? .

உடல் உழைப்பு இல்லாமல் பருப்பும், நெய்யும் பாதுகாப்பாக சாப்புடுவது எப்படி. என்னை உழைக்க சொல்கிறது சனாதனம். மோகன் பகவத் கைகளில் கடப்பாரை பார்த்து உள்ளீர்களா? அம்பேத்கரின் பிள்ளை, பெரியாரின் மாணவன் எனக்கு சமூக பொறுப்பு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை தவிர்த்து எதிர்கட்சி கூட்டணி அமைப்பது மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர வழி வகுக்கும் என பணிவுடன் தெலுங்கானா முதல்வரிடம் கூறி வந்துள்ளேன். முன்னாள் மத்திய அமைச்சரின் முன்னிலையில் சொல்கிறேன். வாலை சுற்றி வையுங்கள், இல்லாவிட்டால் வால் நறுக்கப்படும். அதிமுக பிஜேபியுடன் கைகோர்த்து போவதை கைவிடுங்கள் எம்.ஜி.ஆர் மீதும், மோடியா? லேடியா? சவால் விட்ட ஜெயலலிதா மீது மதிப்பு வைத்தால் பாஜகவை கைவிட வேண்டும். நாளையே அறிக்கை விட வேண்டும். நாளை பாஜகவில் ஒரு எம்பி வந்து விட்டால், அடுத்த 5 ஆண்டுளில் ஜெய் அனுமான், ஜெய் ஸ்ரீராம் சொல்லும் காலம் வந்துவிடும். இவ்வாறு அவர் பேசினார்.