திமுகவின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்
திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. கிளைக்கழகம், பேரூர், நகரம், ஒன்றிய, மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, திமுக அமைப்பு ரீதியான மாவட்டங்களில் மாவட்ட செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர், அவை தலைவர், தலைமைக் கழகத்தால் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று மாவட்ட வாரியாக தேர்வானவர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது.
திமுகவின் உட்கட்சித் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு அக்டோபர் 9ஆம் தேதி (இன்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி ‘விங்க்ஸ்’ கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்றது. திமுக தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் தற்போதைய தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், இரண்டாவது முறையாக அவர் போட்டியின்றி தேர்வானார். இதையடுத்து திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்வதற்கான கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், திமுக தலைவராக 2ஆவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக தேர்வானார். பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டனர். முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு மீண்டும் நியமனம் செய்யப்பட்டார். முகமது சகி, கு.பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகியோர் திமுகவின் தணிக்கை குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
திமுகவின் துணை பொதுச்செயலாளர்களாக ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மகளிர் கோட்டாவில் திமுக மகளிரணி செயலாளரும், அக்கட்சியின் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி, திமுக துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரும், கட்சியின் சீனியர்களில் முக்கியமானவருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்துள்ளதால் அந்த பதவி காலியானது. அதன் தொடர்ச்சியாக, அந்த பதவிக்கு கனிமொழி தேர்வாகியுள்ளார். திமுகவை பொறுத்தவரை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர் ஆகிய பதவிகளுக்கு அடுத்தபடியாக துணைப் பொதுச்செயலாளர் பதவி மிக முக்கியத்துவம் வாய்ந்த பதவி.
கழக மேடைகளை தலைவரோடு அமர்ந்து அலங்கரிக்கும் துணைப் பொதுச்செயலாளர்கள், தலைமைக் கழகத்தின் அடுத்தக்கட்ட உயர் பதவிகளுக்கும் செல்வார்கள். திமுகவில் கட்சி, நிர்வாக ரீதியாக உயர்மட்ட பொறுப்பு ஒன்றை கனிமொழிக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட நாட்களாக வலுத்து வந்த நிலையில், திமுகவின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக மகளிரணி செயலாளரும், எம்பியுமான கனிமொழி துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவதாக மேடையில் ஸ்டாலின் அறிவித்தார். அப்போது எழுந்த கரகோஷத்துக்கு இடையே கனிமொழி பேசியதாவது:-
1947ல் ராபின்சன் பூங்காவில் திமுக தொடங்கப்பட்ட போது, பெரியாருக்கும் திமுக தலைவருக்கும் இடையில் இருந்த இடைவெளி, அண்ணாவின் மனதை உருத்திக்கொண்டே இருந்தது. அந்த மேடையில் அவர் பேசும்போது நாம் இயக்கத்தை நடத்தக் கூடிய விதம் என்பது, பெரியாரை ஆறுதல்படுத்தக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்று சூளுரைத்தார். கனவை நிறைவேற்றிய கருணாநிதி அதேபோல் 1967ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது சுயமரியாதை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது, தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் செய்தது என தொடர்ந்தது. அது பெரியாரால் பாராட்டக் கூடிய ஆட்சியாக உருவாக்கினார்கள். 1967ல் ஆட்சி வந்த போது, ஆட்சி வந்துவிட்டது, கட்சி போய்விட்டது என்று அண்ணா பேசியதாக கூறுவார்கள். ஆனால் அந்த பயத்தை, சந்தேகத்தை கருணாநிதி கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து இயக்கத்தின் கனவுகளை நிறைவேற்றினார்.
அவருக்கு பின் தமிழ்நாட்டில் வெற்றிடம் உருவாகிவிடும் என்று சொன்னார்கள். வெற்றிடம் உருவாக வேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டார்கள். நமது கொள்கைகளுக்கு எதிராக ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிவிடலாம் என்று பரம்பரை பகைவர்கள் கனவு கண்டார்கள். ஆனால் அந்த சாம்ராஜ்ஜியங்களை எல்லாம் தகர்க்கக் கூடிய வகையில், மு.க.ஸ்டாலின் எழுந்து நின்றார். அரசியல் வெற்றிகள் என்பது மட்டுமல்லாமல், கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் செயல்பட்டு வருகிறார். நமது பிள்ளைகள் கல்வி கற்க சென்று 100 ஆண்டுகள் கூட ஆகவில்லை. அதற்குள் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில், சனாத சக்திகள் பிள்ளைகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று செயல்படுகிறார்கள். அனைவருக்கும் திராவிட மாடல் ஆட்சி சம உரிமையை வழங்கி வருகிறது. ஆனால் அதற்கு எதிராக சனாதன சக்திகள் செயல்பட்டு வருகிறது. அதனை முறியடிக்க வேண்டும்.
மு.க.ஸ்டாலினின் தலைமையிலான போராட்டம் அரசியல் வெற்றிக்கான போராட்டம் இல்லை. இது சுயமரியாதைக்கான போராட்டம். அந்தப் போராட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி கூறிக் கொள்கிறேன். அண்ணா, அப்பா இல்லாத இடத்தில் நான் உங்களை வைத்து பார்க்கிறேன். உங்கள் வழியில் நீங்கள் எடுத்து வைக்கக்கூடிய வழிகளில், தேர்ந்தெடுக்கக் கூடிய போராட்டங்கள் அனைத்திலும் அணிவகுக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
கனிமொழி கண்கலங்கியதை கண்டு, பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்த திமுக உடன்பிறப்புகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.