உலக நாடுகளுக்கு விரைவில் இந்தியா தலைமை ஏற்கும் என, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். விழாவில் இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் பட்டப்படிப்பை முடித்த 567 மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கினார். பின்னர் இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பட்டம் பெற்றிருப்பதன் மூலம் மாணவர்கள் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வைக்கின்றனர். கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் நடைபெறும் ஒரு செயலாகும். நமது விஞ்ஞானிகள் கொரோனா காலத்தில் புதிய வகை மருந்துகளை கண்டுபிடித்து தங்கள் திறமைகளை காட்டினர். இன்றைய இளம் தலைமுறையினர் மற்றும் மாணவர்கள் வியக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேசத்தை வல்லரசாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா பல துறைகளிலும் முன்னேறிக்கொண்டு இருக்கிறது. கல்வியிலும் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.
தற்போது மிகச்சிறந்த தலைமையின் கீழ் நாம் இயங்குகிறோம். இதன் பலனாக பல நல்ல திட்டங்கள் நமக்கு கிடைத்துள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு உலக நாடுகளின் வரிசையில் நமது நாடு சிறப்பானதாக இல்லை. இப்போது அனைத்து நாடுகளும் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்க தொடங்கியிருக்கின்றன. முன்பை விட நம் நட்டிற்கு நம்பிக்கை பிறந்துள்ளது. சர்வதேச அளவில் மிகச்சிறந்த நாடுகளின் வரிசையில் 3 ஆம் இடத்தில் உள்ளோம். மிகச்சிறந்த தலைமைதான் இதற்கு காரணம்.
கொரோனா பெருந்தொற்று சமயத்தில் இந்தியா சிறப்பாக செயல்பட்டது. பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறிய நாடாக உள்ள இந்தியா உலக நாடுகளுக்கு விரைவில் தலைமை தாங்கும் நிலை வரும். நாடு வளரும் போதுதான் நாம் வளர முடியும். இதன் மதிப்பை நீங்கள் வெளிநாடுகளுக்கு சென்று இந்தியன் என்று சொல்லும் போது உணர முடியும். 2047 ஆம் ஆண்டு இந்தியா தனது நூற்றாண்டு சுதந்திர நாளை கொண்டாடும். நூற்றாண்டு சுதந்திர தினத்தை நிறைவு செய்யும் நேரத்தில் இந்தியா முன்னேறிய நாடாக மாறியிருக்கும். உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு நம் நாடு கலாசாரத்தை கொண்டுள்ளது. ஆன்மீகத்திலும் சிறந்த நாடாக இந்தியா மட்டுமே விளங்குகிறது. எனவே இந்த கலாசாரத்தை போற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.