பசுமைத் தாயகம் சார்பில் காலநிலை மாற்றம் குறித்து ‘சென்னை ஓட்டம்’ என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று நடைபெற்ற நிலையில், அதில் பேசிய அன்புமணி, திரைத்துறையினர் ஒரு விஷயத்தை சொன்னால், மக்களிடம் விரைவில் அது சென்றடையும் என்றார்.
இன்று சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில், பசுமைத் தாயகம் சார்பில் காலநிலை மாற்றம் குறித்து ‘சென்னை ஓட்டம்’ என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி, திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் சித்தார்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் அன்புமணி பேசியதாவது:-
எங்களுடைய நோக்கம் தமிழக அரசு, காலநிலை மாற்றங்கள் சம்பந்தமான பிரச்சனையை கையில் எடுக்க வேண்டும். உடனடியாக காலநிலை அவசர நிலையை பிரகடனம் செய்ய வேண்டும். ஒரு பக்கம் வறட்சியாகவும், ஒரு பக்கம் மழை வெள்ளத்தாலும் சூழப்பட்டுள்ளது. எனவே, காலநிலை மாற்றம் குறித்தான நடவடிக்கையை தமிழகத்தில் எடுக்க வேண்டும் என்பதற்காகவே, பசுமைத் தாயகம் சார்பில் இன்று ஒரு விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில், திரைத் துறையை சார்ந்த நடிகர் சித்தார்த், இயக்குனர் விக்னேஷ் சிவன், பசுமை தாயகத்தினுடைய நிர்வாகிகள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் வருகை தந்திருக்கிறார்கள்.
இந்த காலநிலை மாற்றம் குறித்து பொதுமக்கள் மத்தியில், மாணவர்கள் மத்தியில், இளைஞர்கள் மத்தியில், தொழிலாளர்கள் மத்தியில், தொண்டு நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அனைவருக்கும் பொறுப்புள்ளது. அனைவரும் தங்களது கடமையை செய்ய வேண்டும். கிராம ஊராட்சி தொடங்கி பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, அரசாங்கம் முதல் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து விழிப்புணர்வுடன் கடமையை செய்ய வேண்டும்.
புதிய ஏரிகளை உருவாக்க வேண்டும், ஆறுகளில் தடுப்பணை கட்ட வேண்டும், இன்னும் இருக்கின்ற நீர்நிலைகளை தூர்வார வேண்டும். இதற்கு நிச்சயம் தமிழக அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகின்ற பருவமழையை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை போதுமானதாக இல்லை. இன்னும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் அங்கங்கே பள்ளங்கள் தோண்டி வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஏற்கனவே வலியுறுத்தி இருக்கிறோம். விரைவில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலநிலை மாற்றம் குறித்து திரைத்துறையினருக்கு நான் அன்பான வேண்டுகோள் வைத்து இருக்கிறேன். நிச்சயமாக நடிகர்கள், இயக்குனர்கள் சங்கங்களுக்கு கடிதம் எழுத உள்ளேன். திரைத்துறையினர் ஒரு விஷயத்தை சொன்னால், மக்களிடம் விரைவில் அது சென்றடையும். அவர்கள் அதனை செய்வார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அன்புமணி கூறினார்.