ஆன்லைன் சூதாட்டத்திற்கு மத்திய அரசும் தடை விதிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு தமிழகத்தில் தொடர் கதையாகி வந்தது. பல குடும்பங்கள் பணத்தை இழந்து வறுமையில் சிக்கி தவித்து வந்தன. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தேமுதிக சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி இருந்தேன். இதையடுத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்த நிலையில், அதனை தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்திருந்தது.
அந்த அவசர சட்டத்திற்கு ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதனை தேமுதிக சார்பில் வவேற்கிறேன்.
பணத்தை வைத்து சூதாட்டங்களில் ஈடுபடும் விளையாட்டுகளுக்கு இந்த அவசரச் சட்டம் மூலம் தடை விதிக்கப்படும் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் ஆன்லைன் சூதாட்டங்களால் ஏற்படும் தற்கொலை சம்பவங்கள் தடுக்கப்படும். வரும் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க உள்ள தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டமாக இயற்றி, அதனை முறையாக செயல்படுத்த வேண்டும். சட்டம் இயற்றப்பட்ட பின் தமிழ்நாட்டுக்குள் எந்த ஒரு நபரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட முடியாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு முழுமையாக தடை விதிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. எனவே, ஆன்லைன் சூதாட்டம் எங்கும் நடைபெறாத வகையில் மத்திய அரசும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.