முதல்வர் முக ஸ்டாலினுக்கு தேசிய அளவில் சமூக பொறுப்பு உருவாகியுள்ளது: திருமாவளவன்

திமுக தலைமை பொறுப்பை ஏற்கிற தமிழக முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களுக்கு தேசிய அளவில் ‘சமூகப் பொறுப்பு’ உருவாகியுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.

திமுகவின் பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கட்சித்தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தொல். திருமாவளவன் வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்திய நாட்டுக்கே கருத்தியல் அடிப்படையிலான பேரிடர் சூழ்ந்துள்ள நிலையில், திமுக தலைமை பொறுப்பை ஏற்கிற தமிழக முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களுக்கு தேசிய அளவில் ‘சமூகப் பொறுப்பு’ உருவாகியுள்ளது. ஜனநாயகத்தைப் பாதுகாத்திட குறிப்பாக, சனாதன சங்பரிவார்களின் சமூகப் பிரிவினைவாதப் போக்குகளை முறியடிக்க வேண்டிய கடமை உள்ளது. அதாவது இந்திய அளவில் சனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. எனவே தேசிய அளவில் செயல்திட்டங்களை வரையறுத்து இயங்கிட வேண்டுமெனவும் அரசமைப்புச்சட்டம் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாத்திட அவர் முன்வர வேண்டுமெனவும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட கனிமொழி எம்.பிக்கும் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு இருந்தார். திருமாவளவன் வெளியிட்டுள்ள பதிவில், ”திமுகவின் துணைப் பொதுச் செயலாளராகப் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ள மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்து இருந்தார்.