ரஷ்யாவை தாக்க முயற்சித்தால் உக்ரைனுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபர் விளாதிமீா் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. 7 மாதங்களைக் கடந்து போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவையும் அந்த நாட்டால் இணைத்துக்கொள்ளப்பட்ட உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தையும் இணைக்கும் பாலம், சனிக்கிழமை நடத்தப்பட்ட லாரி குண்டுவெடிப்பில் சேதப்படுத்தப்பட்டது. இதனால், அந்தத் தீவுடன் ரஷ்யாவுக்கு இருந்த ஒரே சாலை வழி விநியோக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன்தான் காரணம் என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை முதல் உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக ஏவுகணை மூலம் ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தினர். இதில், பலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து புதின் பேசியதாவது:-
உக்ரைனின் ஆற்றல், ராணுவம் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் ஏவுகணை மூலம் இன்று தாக்கப்பட்டன. ரஷ்யப் பகுதிகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்றால் தக்க பதிலடி வழங்கப்படும். கிரீமியா பாலம் குண்டுவெடிப்பில் தகர்க்கப்பட்டது ஒரு பயங்கரவாத செயல். இந்த தாக்குதலுக்கு பின்னணியில், உக்ரைனின் சிறப்புப் படைகள் உள்ளன. மேலும், துருக்கி குழாய் வழியையும் தகர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்தால், பதிலடி கடுமையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இன்று காலை தலைநகர் கீவில் சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் தொடர்ச்சியாக பலமுறை நடைபெற்றுள்ளதாக கீவ் மேயர் தகவல் தெரிவித்தார்.
இன்று காலை ரஷ்யா 17 ட்ரோன்கள் மூலமாக 83 ஏவுகணைகள் வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் அவற்றில் 43 ஏவுகணைகள் உக்ரைனின் ஆயுதப் படைகளால் வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைனின் விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னாட் தெரிவித்தார்.
இந்நிலையில் ரஷ்யா எங்களை முற்றிலுமாக அழிக்க நினைக்கிறது. பூமியிலிருந்து அகற்ற நினைக்கிறார்கள் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி இன்று காலை 8.15 மணிக்கு தலைநகரின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், “உக்ரைன் முழுவதும் நடந்துள்ள குண்டுவெடிப்பால் பலர் இறந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். ரஷ்யா எங்களை முற்றிலுமாக அழிக்க நினைக்கிறது. பூமியிலிருந்து அகற்ற நினைக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
