நடத்தப்பட்ட ஏவுகணைகள் சோதனை தென்கொரியா மீதான அணு ஆயுத தாக்குதலுக்கான ஒத்திகை என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.
தென்கொரியாவில் அந்த நாட்டின் கடற்படை அமெரிக்க கடற்படையுடன் இணைந்து கடந்த 2 வாரங்களாக போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது. அந்த வகையில் வடகொரியா கடந்த 2 வாரங்களில் 7 முறை ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இந்த ஏவுகணைகள் சோதனை தென்கொரியா மீதான அணு ஆயுத தாக்குதலுக்கான ஒத்திகை என வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. ஆளும் தொழிலாளர் கட்சியின் 77-வது ஆண்டு விழாவையொட்டி வடகொரியா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சோதிக்கப்பட்ட 7 ஏவுகணைகளும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் மேற்பார்வையில் சோதிக்கப்பட்ட 7 ஏவுகணைகளும் தென்கொரியாவின் ராணுவ தளங்கள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை தாக்கும் திறனை வெற்றிகரமாக உறுதி செய்தன. இந்த ஏவுகணைகள் சோதனை தென்கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் ஒரு வெளிப்படையான எச்சரிக்கை. மேலும் இது எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க தயாராக இருக்கும் வடகொரியாவின் அணுஆயுத படையின் திறனனை முழுமையாக காட்டுகிறது” என கூறப்பட்டுள்ளது.