ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதல்களை உக்ரைன் மீது நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் முக்கியமான பாலம் அண்மையில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக குற்றம் சாட்டிய ரஷ்யா, உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. குறைந்தபட்சம் 5 இடங்களில் ஏவுகணைகள் விழுந்து வெடித்ததாக கூறுப்படுகிறது. இது குறித்த வீடியே சமூக வளைதளங்களில் வைரலாகின.
இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-
ரஷ்யா நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர், ஏராளமானோர் காயமடைந்தனர். உக்ரைன் மக்கள் மீது புதின் நடத்தும் சட்ட விரோதப் போரின் முழுமையான மிருகத்தனம், மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மக்களுக்கு அமெரிக்கா நீண்ட காலம் ஆதரவு தர வேண்டும் என்ற எங்கள் உறுதிப்பாட்டை, ரஷ்யாவின் இந்த தாக்குதல்கள் வலுப்படுத்துகிறது. எங்களது கூட்டாளிகள் மற்றும் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, ரஷ்யாவிற்கு நாங்கள் தொடர்ந்து பாடம் புகட்டுவோம். போர்க்குற்றங்களுக்கு புதின் மற்றும் ரஷ்யாவை பொறுப்பு ஏற்க வைப்போம். உக்ரைன் ராணுவம் தங்கள் நாட்டையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க தேவையான ஆதரவை வழங்குவோம். இவ்வாறு பைடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா சரமாரியாக ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டிருக்கிறது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது. எனவே உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும், உக்ரைன் அரசு மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் எனவும் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்கள் நிலை குறித்து தூதரகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.