குட்டி காவலர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

‘குட்டி காவலர்’ என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

பள்ளி மாணவர்களைக் கொண்ட ‘குட்டி காவலர்’ எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடங்கி உள்ளது கோவையைச் சேர்ந்த உயிர் அமைப்பு. இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். கோவை கொடிசியாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 5 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் சுமார் 5 லட்சம் மாணவர்கள் பள்ளிகளில் இருந்தவாறே பங்கேற்றனர்.

சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்ந்து வரும் நிலையில், பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. உலகிலேயே இந்தியாவில்தான் அதிக சாலை விபத்துகளும், அதனால் அதிக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. நாட்டில் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்களில் முதல் மூன்று இடத்தில் தமிழகமும் உள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில்தான் அதிக சாலை விபத்துகள் நடக்கின்றன. சாலை விபத்துகளை தவிர்க்கவும், சாலை பாதுகாப்புக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோவையைச் சேர்ந்த உயிர் அமைப்பு, அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சாலையின் அனைத்து இடங்களிலும் போக்குவரத்து காவலர்களை நியமித்து வாகன ஓட்டிகளை கண்காணிப்பதும், ஒழுங்குபடுத்துவதும் கடினம். எனவே, தமிழக அரசுடன் இணைந்து, பள்ளி மாணவர்களைக் கொண்ட ‘குட்டி காவலர்’ எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம் உயிர் அமைப்பால் தொடங்கப்பாட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி பள்ளி மாணவர்களுக்கு சாலை விபத்தால் ஏற்படும் பாதிப்புகள், சாலை விதிகள் போன்றவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும். இந்தத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து இன்று காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். பின்னர், சாலை பாதுகாப்பு உறுதிமொழியை மாணவர்களை ஏற்கச் செய்தார். மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமை செயலர் இறையன்பு உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

கோவை கொடிசியாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நேரடியாக சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். ‘தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவோம், அதிவேகமாக வாகனத்தை இயக்க மாட்டோம், வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசமாட்டோம்’ என சாலை பாதுகாப்பு உறுதிமொழியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் வாசிக்க, பள்ளி மாணவர்கள் அந்த உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டனர். மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் இருந்தபடியே உறுதிமொழியேற்றனர்.