அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 8 மாதக் பெண் குழந்தை உள்பட 4 இந்தியர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி தன் மீதான அனைத்துக் குற்றங்களையும் ஒப்புக்கொண்டார்.
மெர்செட் கௌண்டி நீதிமன்றத்தில் நேற்று குற்றவாளி ஜீசஸ் மேனுவல் சல்காடோ ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது நான்கு பேரையும் கொலை செய்தது, நான்கு பேரின் உயிரிழப்புக்கும் முக்கிய காரணமாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இது மட்டுமல்லாமல், தனது வாகனத்தில் சட்டத்தை மீறி ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும், கொலை செய்யப்பட்டவர்களின் வாகனத்துக்கு தீ வைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டன. அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் சல்காடோ நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். இந்த தண்டனைகளின் கீழ் அவர் தண்டிக்கப்பட்டால், சால்கடோ, பரோலில் விடுதலை செய்ய வாய்ப்பில்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
8 மாதக் கைக்குழந்தை உள்பட நால்வரை கொலை செய்த சல்காடோ, இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதற்குக் காரணத்தை தெரிவித்துள்ளார். இந்த குடும்பத்துடன் தனக்கு நீண்ட நாள் பகை இருந்ததாகவும், இந்த குடும்பத்தினர் நடத்திய வந்த டிரக்கிங் தொழிலில் தான் முன்னாள் ஊழியராக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். பழிவாங்குவதற்காகவே, ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொலை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கொல்லப்பட்ட நால்வரின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை டர்லாக்கில் நடைபெறும் என்று குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். பொதுமக்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதியில்லை. எனினும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இறுதிச் சடங்கு நடக்கும் பகுதிக்கு வெளியே அனுமதிக்கப்படுவர்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 8 மாதக் குழந்தை, அவரது பெற்றோர் உள்பட நான்கு பேரும் கடந்த வாரம் திங்கள்கிழமையன்று கடத்தப்பட்டதாக தகவல் கிடைக்கப்பெற்று காவல்துறையினர் தேடி வந்த நிலையில், இரண்டாவது நாள் அவர்கள் கடத்தப்பட்ட பகுதிக்கு அருகே நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது கலிபோர்னியாவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
வழக்கை விசாரித்து வரும் மெர்செட் கௌண்டி ஷெரிப் வெர்ன் வார்ன்கே கூறுகையில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.