காந்திநகரில் உள்ள குஜராத்தின் பழைய தலைமை செயலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் 27 ஆண்டுகால ஊழல் ஆதாரங்களை எரிக்க பாஜக அரசே தீ வைத்திருக்கலாம் என காங்கிரஸ் சந்தேகம் கிளப்பியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தலைநகர் காந்திநகரில் உள்ள குஜராத் மாநில பழைய தலைமை செயலகத்தில் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பிளாக் எண் 16ல் ஏற்பட்ட தீயின் காரணமாக முக்கிய ஆவணங்கள், அலுவலக உபயோக பொருட்கள், நகர்புற வளர்ச்சித்துறை அலுவலகம் முழுவதும் தீயில் கருகின. விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தினர். இரண்டரை மணி நேரமாக பற்றி எரிந்த தீயின் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் கட்சி பரபரப்பு புகாரை முன்வைத்து இருக்கிறது. இது தொடர்பாக அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் தீ விபத்து வீடியோவுடன் ஒரு ட்வீட் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “அரசாங்கத்தின் ஆவணங்கள் குஜராத்தில் எரிந்து வருகின்றன. குஜராத்தில் பழைய தலைமைச் செயலகத்தில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு இந்த ஆவணங்கள் எரிந்துள்ளது, பாஜக ஆட்சிக்கு வருவதை ஏற்கனவே அறிந்திருப்பதை விளக்குகிறது. இந்த பரபரப்பில் 27 ஆண்டுகால ஊழல் ஆவணங்கள் எல்லாம் தீயில் கருகிவிட்டன” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தேசிய இளைஞரணி தலைவர் பிவி ஸ்ரீனிவாசும் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “தீ விபத்தில் கருகிய ஆவணங்கள்தான் 27 ஆண்டுகால ஊழலின் ஆதாரங்கள். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் குஜராத்தின் பழைய தலைமை செயலகமாகும். அங்குதான் அரசின் ஆவணங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இது எதேர்ச்சையாக நடைபெற்றதா அல்லது வேண்டுமென்றே செய்தார்களா?” என்று கூறியுள்ளார்.