பாகிஸ்தானில் முன்னாள் தலைமை நீதிபதி சுட்டுக் கொலை!

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாண முன்னாள் தலைமை நீதிபதி முகமது நூர் மெஸ்கன்சாய் மசூதிக்கு வெளியே நிகழ்த்தபட்ட துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாண நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முகமது நூர் மெஸ்கன்சாய் மீது நேற்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பள்ளிவாசலுக்கு வெளியே நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த முகமது நூர் மெஸ்கன்சாய் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாகிஸ்தான் நீதிமன்ற வரலாற்றில் மிகவும் தைரியமான நீதிபதி என்ற பெருமைக்குரிய முகமது நூர் மெஸ்கன்சாய்க்கு பலமுறை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஷரியாவுக்கு எதிராக ரிஃபா அடிப்படையிலான வங்கி முறையை அறிவிக்கும் முக்கிய தீர்ப்பை வழங்கியவர் இவர் தான்.

பலுசிஸ்தான் முதலமைச்சர் மிர் அப்துல் குதூஸ் பிசென்ஜோ முன்னாள் நீதிபதி முகமது நூர் மெஸ்கன்சாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது கோழைத்தனமான நடவடிக்கை என்றும் அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.