ராணுவத்திற்கு அதிநவீன ஆயுதங்களை தயாரிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது. 76 சதவீத உள்நாட்டு சாதனங்களைக் கொண்டு ஐ.என்.எஸ். விக்ராந்த் தயாரிக்கப்பட்டுள்ளது என்று ராஜ்நாத்சிங் கூறினார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் கூறியுள்ளதாவது:-
நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைத் தயாரிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது. தற்சார்பு மற்றும் பாதுகாப்பான எல்லைகள் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றுவதற்கு முக்கியமாக உள்ளன. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அதிநவீன ஆயுதங்கள், தளவாடங்களுடன் ஆயுதப் படைகளைத் தயார் படுத்துவதில் பாதுகாப்புத் துறை கவனம் செலுத்தி வருகிறது. 76 சதவீத உள்நாட்டு சாதனங்களைக் கொண்டு ஐ.என்.எஸ்.விக்ராந்த் தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில், விண்வெளி பாதுகாப்பு தளங்களை உற்பத்தி செய்யத் தொடங்கும்.
அரசின் பார்வையில் மற்றொரு முக்கிய அம்சமாக இருப்பது எல்லைப் பகுதி மேம்பாடு. சவாலான சூழ்நிலையிலும் வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே உள்ள சிறப்பான ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது. பெரும்பாலான நாடுகள் இன்று பொருளாதார மந்த நிலையின் சிக்கலை எதிர் கொள்கின்றன. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைத்து மதிப்பிடப்பட்டாலும், அது இன்னும் 6.1 சதவீதமாகவே உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.