அ.தி.மு.க. 51-வது ஆண்டு தொடக்க விழா: சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை!

அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 51-வது ஆண்டு தொடங்குகிறது. கட்சி அலுவலகத்தின் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆளுயர மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார்.

அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 51-வது ஆண்டு தொடங்குகிறது. இதையொட்டி தொடக்க விழா நிகழ்ச்சிகள் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. காலை 10.30 மணி அளவில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகம் வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான தொண்டர்கள் அவரை வரவேற்று நிரந்தர பொதுச்செயலாளர் வாழ்க, புரட்சி தலைவி ஜெயலலிதா வாழ்க, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள். அதைத்தொடர்ந்து கட்சி அலுவலகத்தின் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆளுயர மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார். அதைத்தொடர்ந்து கட்சி கொடி கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னிலை வகித்தார். அதைத்தொடர்ந்து அங்கு திரண்டிருந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி இனிப்புகள் வழங்கினார். பின்னர் தலைமை கழகத்துக்குள் சென்று தனது அலுவலகத்தில் அமர்ந்து இருந்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், பி.ஜே.குமார், கே.பி.முனுசாமி, தம்பிதுரை, பா.வளர்மதி., செங்கோட்டையன், எம்.ஆர். விஜயபாஸ்கர். எஸ்.பி. வேலுமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வைகை செல்வன், கோகுல இந்திரா, டாக்டர் எஸ்.விஜயபாஸ்கர், கே.பி.தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், செம்மலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். நல்லாசியோடு ஜெயலலிதா நல்லாசியோடு அ.தி.மு.க. 50-வது பொன்விழா ஆண்டை நிறைவு செய்து இன்று 51-வது ஆண்டு நிகழ்ச்சிகள் மிகச்சிறப்பாக எழுச்சியாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைமை கழகத்திலும் மிகச் சிறப்பாக எழுச்சியாக அனைத்து தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் வரவேற்புடன் மிகச் சிறப்பாக தொடக்க விழா ஆண்டை கொண்டாடினோம். நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் அ.தி.மு.க 51-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி தி.நகரில் உள்ள எம் ஜி.ஆர். நினைவு இல்லத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிமு.க கொடியேற்றி வைத்து தலைவர்கள் படங்களுக்கு மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க 51-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் மலர்கள், வாழை, தென்னை தோரணங்கள், கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வீதியெங்கும் அ.தி.மு.க. கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டு இருந்தன. காலை 8 மணி முதல் தொண்டர்கள் வரத்தொடங்கினார்கள். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 9 மணிக்கு வந்தார். அவருக்கு மேள தாளம் முழங்க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மகளிர் அணி சார்பில் பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. கொடி ஏற்றினார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆரவார கோஷமிட்டு கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். வெள்ளை சமாதான புறா பறக்க விட்டார். அதன் பின்பு தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் வைத்தியலிங்கம்,மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன், கு.ப.கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் எம்.எம்.பாபு, வெங்கட்ராமன், அம்மன் பி.வைரமுத்து, பி.எஸ்.சிவா, டி.கிருஷ்ணமூர்த்தி, த.மகிழன்பன், ரெட்சன் சி.அம்பிகாபதி, ஏ.கே.ரமேஷ், கே.கிருஷ்ணன், எம்.வி.சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.