தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படுவார்கள்: மு.க.ஸ்டாலின்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் யார் யார் குற்றவாளிகளோ, அவர்கள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை ஆகிய இரு அறிக்கைகளும் சட்டப்பேரவையில் சமர்பிக்கப்பட்டது. இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்றது. அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இடம் பெற்றுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ள அனைவர் மீதும் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் எனவும், அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி உள்பட தவறு செய்த அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த முதல்வர் ஸ்டாலின், “சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியதை அடிப்படையாகக் கொண்டு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஏற்கனவே வழங்கிய நிதியோடு கூடுதலாக 5 லட்சம் ரூபாய் சேர்த்து வழங்கப்படும். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் யார் யார் குற்றவாளிகளோ, அவர்கள் கூண்டில் ஏற்றப்படுவார்கள்” என உறுதியளித்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் சத்தமும் – மக்களின் மரண ஓலமும் ஒலித்துக் கொண்டிருந்த காட்சி இன்றும் தனது மனதை வாட்டிக் கொண்டிருப்பதாக தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய, சில அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை பொதுத்துறை மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினை சேர்ந்த 3 வருவாய் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்” என திட்டவட்டம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை அதிமுக அரசு உரிய முறையில் கையாளவில்லை கடப்பாரையை முழுங்கிட்டு கசாயம் குடிச்சிடுவான் எனும் அளவிற்கு பெரிய பொய்யை எடப்பாடி பழனிசாமி அன்றைய தினம் சொன்னார்; அவர் சொன்னது எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர்கள் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஆணையமே சொல்லி விட்டது எனவும் தெரிவித்தார்.