நான் இன்றைக்கு முதலமைச்சராக இருந்திருப்பேன்: சரத்குமார்

சமூக வலைதளங்கள் மட்டும் அப்போதே இருந்திருந்தால் நான் இன்றைக்கு முதலமைச்சராக இருந்திருப்பேன் என்று சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் பேசியுள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கட்சினருக்கு தீபாவளி பரிசுகளை சமக தலைவர் சரத்குமார் வழங்கினார். இதைத் தொடர்ந்து சரத்குமார் பேசியதாவது:-

சமத்துவ மக்கள் கட்சினர் அரசியல் மட்டும் இல்லாமல் ஆன்மீகத்தையும் பேசுவார்கள் என்பதை இன்றைய நிகழ்ச்சி உணர்த்தி இருக்கிறது. வரும் ஆண்டுகளில் இதைவிட சிறப்பாக கொண்டாடுவோம். எந்தவொரு பெரிய பொருளாதார உதவிகளும் இன்றி சமத்துவ மக்கள் கட்சி 15 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருவதே பெரிய சாதனைதான்.

அரசியலுக்கு வருவது பணம் சம்பாதிப்பதற்கு அல்ல, மக்களுக்கு சேவை செய்வதற்கு என நிர்வாகிகள் அறியவேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இங்கு பேசும்போது என்னை தமிழக முதல்வராக அல்ல, வருங்காலத்தில் பிரதமராக வரவேண்டும் என்றார்கள். அது நியாயமான விஷயம் தான். அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஜனநாயக நாட்டில் எல்லாமே நடக்கக்கூடியது தான். மக்களுக்காக உண்மையாக உழைத்து, அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டால் நாம் பிரதமர் ஆகலாம்.

நான் அன்றைய காலத்தில் மக்களுக்கு செய்த உதவிகள் ஏராளம். நாம் மக்களுக்காக அதிகமாக சேவை செய்து கொண்டிருந்த காலத்தில் மொபைல் கேமரா பரவலாக இல்லை. அப்போது சமூக வலைதளங்கள் இருந்து இருந்தால் இன்றைக்கு நான் முதலமைச்சராக ஆகியிருப்பேன். அதை துரதிருஷ்டமாக கருதவில்லை. இப்போதும் மக்களைப் போய்ச் சந்தியுங்கள், நேரடியாக சென்று சந்தித்தால் வெற்றி பெற முடியும். இன்னும் 15 நாட்களில் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவேன். அந்த அறிவிப்பு வரும்போது நீங்கள் அனைவரும் செயல்வீரர்களாக, நான் சொன்னதைச் செய்து வெற்றியடையச் செய்ய வேண்டும். தமிழகம் தழுவிய அளவில் மக்கள் பிரச்சனைகளை நாம் கையில் எடுக்கும்போது மக்கள் நம்மை உறுதியாக வரவேற்பார்கள். என் சிந்தனையெல்லாம் மக்களைப் பற்றித்தான்.

சமத்துவம் தான் முக்கியம். எல்லோர் கையிலும் கீறினால் சிவப்பு ரத்தம் தான் வரும். என்னை கல்லூரியில் படிக்க சேர்க்கும் போது எனது அப்பா மனித சாதி என எழுதினார். எனக்கு சீட் கொடுக்கவில்லை. நமது நாடு முன்னேற்றம் அடைய பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பாதிப்புகளை முன்பே தடுக்க வேண்டுமே தவிர பின்னோக்கிச் சென்று சாதி என்ன என்று ஆராய்ச்சி செய்வது தேவையில்லாதது. இவ்வாறு அவர் பேசினார்.