ரஷ்யாவுடன் இணைத்து கொள்ளப்பட்ட நான்கு பிராந்தியங்களிலும் ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதாக அதிபர் புடின் அறிவித்தார்.
உக்ரைனுடன் போர் தொடுத்துள்ள ரஷ்யா, அதன் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா பகுதிகளை கைப்பற்றி, அவற்றை தனது நாட்டுடன் அதிகாரப்பூர்வமாக இணைத்து கொண்டதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்தார். இந்நிலையில், இந்த ஆக்கிரமிப்புக்குப் பிறகு ரஷ்யாவுடன் இணைத்து கொள்ளப்பட்ட நான்கு பிராந்தியங்களிலும் ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதாக அதிபர் புடின் நேற்று அறிவித்தார். இதன்படி, இப்பிராந்தியங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடுமையான பயணக் கட்டுப்பாடுகள், பொதுமக்கள் கூடுவதற்கு தடை, கடும் சோதனை உள்ளிட்ட கூடுதல் அதிகாரங்களை ஆக்கிரமிப்பு நிர்வாகங்களின் தலைவர்களுக்கு வழங்கப்படும் என்று புடின் தெரிவித்தார்.
இது தொடர்பான ஆவணங்கள் உடனடியாக கூட்டமைப்பு கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்படும். புடினின் முடிவை அங்கீகரிப்பது கூட்டமைப்பு கவுன்சிலின் பொறுப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “பாதிக்கப்பட்ட பகுதிகளுடனான எல்லையை மூடும் திட்டம் ரஷ்யாவிடம் தற்போது இல்லை,’’ என்று தெளிவுபடுத்தினார்.
இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனின் கெர்சன் பகுதியில் உள்ள மக்கள் வெளியேறி வருகின்றனர். மேலும் ரஷ்யா தன் தாக்குதலை தீவிரப்படுத்தி வருவதால் கைப்பற்றிய பிராந்தியங்களை மீட்க உக்ரைன் கடுமையாகப் போரிட்டு வருகிறது. இதனால் உக்ரைனில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் உக்ரைனின் கெர்சன் பகுதியில் உள்ள ரஷியர்கள் பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். கெர்சன் பகுதி ரஷ்யர்கள் அதிகமிருக்கும் பகுதி என்பதால் உக்ரைன் அங்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் கெர்சன் பகுதியில் உள்ள சுமார் 60,000 பேர் அப்பகுதியை விட்டு வெளியேறுவார்கள் என்று கணிக்கப்படுகிறது.
உக்ரைனில் பதற்ற நிலை நிலவுவதால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் இந்தியா்கள் உடனடியாக உக்ரைனைவிட்டு வெளியேறுமாறு கீவ் நகரிலுள்ள இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.