இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து லிஸ் டிரஸ் ராஜினாமா!

பிரிட்டன் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

பிரிட்டன் பிரதமராக இருந்த போரீஸ் ஜான்சன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையில், அவர் சில மாதங்களுக்கு முன் ராஜினாமா செய்தார். இதையடுத்து பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் பொறுப்பு ஏற்றார். இருப்பினும், அதன் பின்னர் அவரது சில பொருளாதார நடவடிக்கையால் பிரிட்டன் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் பிரிட்டன் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் திடீரென ராஜினாமா செய்துள்ளார். 45 நாட்கள் மட்டுமே லிஸ் டிரஸ் பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்துள்ளார் மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத் நியமனம் செய்த கடைசி பிரதமர் லிஸ் டிரஸ் ஆவார். அடுத்த வாரத்திற்குள் இங்கிலாந்தின் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் அமைச்சர் சுவெல்லா பிரேவர்மென் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தவர் சுவெல்லா பிரேவர்மென். இந்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக சுவெல்லா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தாம் தவறு செய்துவிட்டதாகவும், விதிகளை மீறி விட்டதாகவும் சுவெல்லா தெரிவித்துள்ளார். பதவி விலகல் கடிதத்தினை பிரதமர் லிஸ் டிரஸ்ஸிற்கு சுவெல்லா பிரேவர்மென் அனுப்பியுள்ளார்.