இம்ரான் கானை தகுதி நீக்கம் செய்தது தேர்தல் ஆணையம்!

வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசுப் பொருட்களை விதிகளை மீறி விற்ற புகாரில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இம்ரான் கான் தலைமையிலான அரசு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவிழ்ந்தது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத இம்ரான் கான், தனது தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதற்கு வெளிநாட்டு சதி இருப்பதாகக் கூறி வருகிறார். இதற்கிடையே பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்றார். இவரது தலைமையிலான அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார். அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில், இம்ரான் கானின் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில், வெளிநாட்டு தலைவர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசுப் பொருட்களை விதிகளை மீறி விற்ற புகாரில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை தகுதி நீக்கம் செய்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் ஊடகங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.