எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒவ்வொரு கிராமமும், இந்தியாவின் முதன்மையான கிராமமாக கருதப்படும் என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 புகழ்பெற்ற திருத்தலங்கள் உள்ளன. இந்த 4 திருத்தலங்களையும் தரிசனம் செய்யும் ஆன்மிக பயணத்தை சார்தாம் யாத்திரை என்று அழைக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் கடும் பனி பொழிவு இருக்கும் என்பதால் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான கோடை காலத்தில் மட்டுமே இந்த தலங்களுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். குளிர்காலத்தில் இந்த ஆலயங்கள் மூடப்பட்டே இருக்கும். பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் கேதார்நாத், பத்ரிநாத் ஆலயங்களில் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி இந்த ஆண்டு தரிசனத்துக்காக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) 2 நாள் பயணமாக உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சென்றார். டேராடூன் விமான நிலையத்தில் அவரை உத்தரகாண்ட் கவர்னர் குர்மீத் சிங், முதல்-மந்திரி புஸ்கர் சிங் தாமி, மத்திய மந்திரி அஜய் பட் ஆகியோர் வரவேற்றனர். அதன்பிறகு பிரதமர் மோடி டேராடூனில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத்துக்கு புறப்பட்டு சென்றார்.
காலை 8.30 மணிக்கு அவரது ஹெலிகாப்டர் கேதார்நாத்தில் தரை இறங்கியது. அங்கிருந்து அவர் கேதார்நாத் ஆலயத்துக்கு சென்றார். பிரதமர் மோடி வருகையையொட்டி கேதார்நாத் சிவாலயம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கு அவர் சிறப்பு பூஜைகள் செய்தார். கேதார்நாத்தில் ஆதிசங்கரர் முக்தி அடைந்ததாக கூறப்படும் இடத்திலும் அவர் வழிபாடுகள் செய்தார். சிறிது நேரம் அங்கு அமர்ந்து தியானமும் செய்தார். இதையடுத்து கேதார்நாத்-கவுரிகுண்ட் இடையே 7.9 கி.மீ. தொலைவில் அமைய இருக்கும் ரோப்கார் திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கேதார்நாத்தில் சுமார் 3 மணி நேரம் அவர் இருந்தார். அதன் பிறகு அவர் பத்ரிநாத் ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெறும் ஆலயத் திருப்பணிகள் பற்றி ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து சமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலுக்குச் சென்ற அவர், அங்கு சுவாமி தரிசனம் செய்தார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி கோவிலை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதன் பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
மணா கிராமம், இந்தியாவின் கடைசி கிராமமாக கருதப்பட்டது. ஆனால், என்னை பொறுத்தவரை, இனி மேல், எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒவ்வொரு கிராமமும், இந்தியாவின் முதன்மையான கிராமமாக கருதப்படும். கேதார்நாத், பத்ரிநாத்தில் உள்ளதை கவுரவமாகவும், அதிர்ஷ்டமாகவும் கருதுகிறேன். கேதார்நாத்தில் அமைக்கப்படும் ரோப் கார் திட்டம் யாத்ரீகர்களின் பயண நேரத்தை குறைக்கும். கேதார்நாத்தில் கடவுள் சிவனின் ஆசி பெற்றேன். உத்தராகண்டில் கடந்த ஆண்டில் பணியாற்றி உள்ளேன்.
கவுரிகுண்ட் முதல் கேதர்நாத் வரையிலும், கோவிந்த் கட் முதல் ஹேம்குண்ட் சாஹிப் வரையிலுமான ரோப்கார் திட்டம் காரணமாக வளர்ச்சி திட்டங்களுக்கு ஊக்கம் கொடுக்கும். முந்தைய அரசுகள் தங்கள் சுயநலத்திற்காக பணியாற்றின. இந்தியாவானது, அடிமை மனநிலையில் சிக்கி தவித்தது. முந்தைய அரசுகளும் , இந்தியாவை அடிமை தனத்தில் சிக்க வைத்தன. பாஜக ஆட்சியில் அடிமை மனநிலையில் இருந்து இந்தியாவுக்கு விடுதலை கிடைத்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா பயணிகளும், உள்நாட்டு பொருட்களை வாங்க 5 சதவீதம் செலவழிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.