தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பித்த தேர்வர்களுக்கு வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கி, தேர்வு நுழைவுச் சீட்டினை அனுப்பி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரெயில்வே தேர்வு மையங்களை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொடர்வண்டித்துறையில் நிரப்பப்படாமல் உள்ள 24 ஆயிரம் பணியிடங்களுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வு, தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் வரும் மே 9ந் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்விற்காக, தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பித்த தேர்வர்களுக்கு வேற்று மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கி, தேர்வு நுழைவுச் சீட்டினை அனுப்பி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்லில் விண்ணப்பித்த தேர்வருக்கு கர்நாடக மாநிலம் உடுப்பியிலும், ஈரோட்டில் விண்ணப்பித்த தேர்வருக்கு ஆந்திர மாநிலம் நெல்லூரிலும் பலருக்கு வட மாநிலங்களிலும் பணியாளர் தேர்வு வாரியம் வேண்டுமென்றே 1000 கி.மீ.க்கு அப்பால் தேர்வு மையங்களை ஒதுக்கியுள்ளது. தமிழகத் தேர்வர்களிடம் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி, உளவியலாக அவர்களைச் சிதைத்துத் தோல்வியுறச் செய்வதற்கும், தமிழகத் தேர்வர்களைத் தேர்வு எழுதவிடாமலேயே போட்டியிலிருந்து வெளியேற்றுவதற்குமான இனவாதத் தாக்குதலேயாகும்.
முறைகேடாகத் தேர்வு நடைபெறும் வட மாநிலங்களிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும்போது, தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை அமைக்கத் தேர்வு வாரியம் தவறியது ஏன்? என்பது குறித்தும் இந்திய ஒன்றிய அரசும், தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியமும் விளக்கமளிக்க வேண்டும்.
தொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்கள் தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையங்களை உடனடியாக மாற்றி அமைத்துதர தொடர்வண்டித்துறை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் வழிவகைச் செய்ய இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மெனவும், அதுவரை தொடர்வண்டித்துறைத் தேர்வினைத் தள்ளிவைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.