நேருவுக்கு எட்வினா எழுதிய கடிதங்களை வெளியிட மறுப்பு

நேருவுக்கு எட்வினா எழுதிய கடிதங்களை வெளியிட இங்கிலாந்து தீர்ப்பாயம் மறுப்பு.

பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி அரசப் பிரதிநிதியும், சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநராகவும் இருந்தவர் மவுண்ட் பேட்டன். இவரது மனைவி எட்வினா மவுண்ட் பேட்டன். இவருக்கும், நாட்டின் முதல் பிரதமருமான ஜவகர்லால் நேரு இடையே நெருக்கமான நட்பு இருந்தது. இந்நிலையில், மவுண்ட் பேட்டனின் டைரிக் குறிப்புகள் மற்றும் 1947 முதல் 1960 வரை நேரு – எட்வினா இடையே நடந்த கடித பரிமாற்றம் ஆகியவற்றை பொது வெளியில் வெளியிடக் கோரி எழுத்தாளர் ஆன்ட்ரூ லோனி இங்கிலாந்து முதல் அடுக்கு (தகவல் உரிமைகள்) தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். தனது புத்தகத்திற்காக 4 ஆண்டாக அவர் இந்த சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

இந்த வழக்கில் தீர்ப்பாயம் தற்போது இறுதி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், நேரு – எட்வினாவின் தனிப்பட்ட கடிதங்களை வெளியிட முடியாது என தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது. நீதிபதி சோபி பக்லி தனது உத்தரவில், ‘அந்த கடிதங்கள் சவுத்தாம்ப்டன் பல்கலை.யின் பொறுப்பின் பராமரிக்கப்படுகிறது. கடிதங்களுக்கு பல்கலைக் கழகம் உரிமையாளர் கிடையாது. பாதுகாக்கும் பொறுப்பை மட்டுமே ஏற்றுள்ளது. ஏற்கனவே, மவுண்ட் பேட்டன் தொடர்பாக 35,000 ஆவணங்கள் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டு உள்ளன.

இவற்றில் உள்ள 150 பத்திகள் பிரிட்டிஷ் அரச குடும்பத்தைப் பற்றிய நேரடி குறிப்புகளைக் கொண்டிருந்தன. மேலும் சில இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுடன் இங்கிலாந்தின் உறவை மோசமாக்கும் வகையிலும் இருந்தன. அவை பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் கூற்றுப்படி திருத்தப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட பத்திகளில் இங்கிலாந்து ராணி சம்மந்தப்பட்ட விஷயங்களும் உள்ளன. எனவே, அவற்றை பொது வெளியில் வெளியிட உத்தரவிட முடியாது’ என கூறி உள்ளார்.