ஆந்திர எல்லையில் உள்ள சுங்கச்சாவடியில் மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது!

திருப்பதி அருகே தமிழக மாணவர்கள் மீது ஆந்திராவை சேர்ந்த கும்பல் தாக்குதல் நடத்தியதை கண்டித்து ஆந்திர எல்லையில் உள்ள வாணியம்பாடி சுங்கச்சாவடியில் மறியலில் ஈடுபட்டு நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த தமிழ்நாடு எல்லையில் அமைந்து இருக்கிறது புத்தூர் எஸ்.பி.புரம் சுங்கச்சாவடி. இந்த சுங்கச்சாவடி வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினந்தோறும் சென்று வருகின்றன. இவ்வழியே இரு மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தக போக்குவரத்தும், பொது போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது. ஏராளமாக ஆந்திர வாகனங்கள் தமிழ்நாட்டிற்கும் தமிழக வாகனங்கள் ஆந்திராவுக்கும் சென்று வருகின்றன.

திருப்பதியில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வரும் தமிழக மாணவர்கள் கடந்த 23 ஆம் தேதி தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு சென்றனர். தேர்வு எழுதிவிட்டு தமிழகம் திரும்பிக் கொண்டிருந்த சட்டக்கல்லூரி மாணவர்களை புத்தூர் அருகே எஸ்.பி.புரம் சுங்கச்சாவடிக்கு வந்துள்ளனர். மாணவர்களின் காரில் பாஸ்ட் டேக் இல்லாத காரணத்தால் சுங்கச்சாவடி ஊழியர்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்தமாறு கூறி இருக்கிறார்கள். இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழ்நாட்டை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். அப்போது கைகலப்பும் வெடித்து இருக்கிறது. அங்கிருந்த தெலுங்கு கும்பல் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் சேர்ந்து தமிழக மாணவர்களை விரட்டி தாக்கி இருக்கிறார்கள். தமிழக மாணவர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெண்கள் மற்றும் உறவினர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தின் காட்சிகள் சமூக ஊடகங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் ஆந்திர எல்லையில் அமைந்துள்ள வாணியம்பாடியை அடுத்து நெக்குந்து சுங்கச்சாவடியை 75 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கச்சாவடி வழியாக செல்லும் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய சாலை மறியல் போராட்டம் காரணமாக ஏராளமான வாகனங்கள் நகர முடியாமல் நின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினரை அம்பலூர் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.