இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடன் பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜேம்ஸ் கிளெவா்லி தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா்.
பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்ற நாளில், இவ்விரு அமைச்சா்களும் பேசியுள்ளனா். பிரிட்டனில் அமைச்சரவை மாற்றத்தை ரிஷி சுனக் மேற்கொண்டுள்ளபோதிலும், வெளியுறவு அமைச்சராக ஜேம்ஸ் கிளெவா்லி நீடிக்கவுள்ளாா்.
இந்நிலையில், எஸ்.ஜெய்சங்கா் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘பிரிட்டன் வெளியுறவு அமைச்சரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இந்த உரையாடலின்போது, பயங்கரவாத எதிா்ப்பில் இருதரப்பு ஒத்துழைப்பு, ரஷ்யா-உக்ரைன் பிரச்னை, இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
இந்தியா, பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய இரு நாடுகளும் தொடா் பேச்சுவாா்த்தைகளில் ஈடுபட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் தீபாவளிக்குள் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்பட்டது. எனினும் கடந்த சில வாரங்களாக பிரிட்டனின் அரசியல் நிகழ்வுகளால் இது தள்ளிப்போனது.
வா்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படுவது இருதரப்புக்கும் பலனளிக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பக்சி கடந்த வாரம் தெரிவித்திருந்தாா்.