கோவையில் கார் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது தனிப்பட்ட செயல் அல்ல பயங்கரவாத செயல் என்று பாஜகவின் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு வழியாக கடந்த 23-ம் தேதி அதிகாலை 4.10 மணி அளவில் சென்ற மாருதி கார், சங்கமேஸ்வரர் கோயில் முன்புள்ள வேகத் தடையை கடந்தபோது திடீரென வெடித்து தீப்பிடித்தது. காரில் 2 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இருந்ததும், அதில் ஒரு சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதும், காரை ஓட்டிவந்த உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது. உயிரிழந்த ஜமேஷா முபீன் வீட்டில் இருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் ரசாயனப் பொருட்கள், வயர்கள் உள்ளிட்டவை அங்கு அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர்.
முதலில் இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழப்பு, வெடிபொருள் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் உக்கடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். தொடர்ந்து, 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
குண்டு வெடிப்பு நிகழ்ந்த ஈஸ்வரன் கோவிலில் பாஜகவின் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாத முதல்வர் நமக்கு கிடைத்திருக்கிறார். அவர்தான் இந்து பண்டிகைக்கு எல்லாம் வாழ்த்து சொல்ல மாட்டார். நம்முடைய முதல்வர் நமக்கு வாழ்த்து சொல்ல மாட்டாரா என்ற ஏக்கம் மக்களுக்கு இருக்கிறது. அது கூட பரவாயில்லை. கோவை இவ்வளவு பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. மிகப்பெரிய குண்டு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட மாநகரம் கோவை. 1998 குண்டு வெடிப்பிற்கு பின்னர் பல இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் தலைவர்களை இந்த மண்ணிலே நாங்கள் பலி கொடுத்திருக்கிறோம். மிகப்பெரிய பயங்கரவாத செயல் நடந்த பின்னரும் கூட முதல்வர் நேரில் வந்து பார்வையிடவில்லை. இதுபற்றி வாயைக்கூட திறக்காதது கடுமையான கண்டனத்திற்கு உரியது.
இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் கோவையை இன்னும் பழிவாங்கும் எண்ணத்தோடுதான் நடத்துகிறாரா என்ற எண்ணம் மனதிற்குள் எழுகிறது. எல்லாவற்றிக்கும் அறிக்கை கொடுக்கும் முதல்வர், தங்களின் அமைச்சர்கள் வாயிலாக பதிலளிக்கும் முதல்வர், இதுபற்றி ஏன் வாயை திறக்க மறுக்கிறார். காவல்துறையினர் புலனாய்வு விசாரணை நடக்கிறது. டிஜிபி வந்து ஆய்வு செய்தார். 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதெல்லாம் சரிதான். கோவை மக்களுக்கு உறுதுணையாக நான் இருக்கிறேன். இதுபோன்ற பயங்கரவாத செயல்களை ஒருபோதும் நான் சகித்துக்கொள்ள மாட்டேன் என்று முதல்வர் சொல்லவில்லை.
இந்த மாதிரி தொடர்புடைய இயக்கங்கள்.. இந்த இயக்கங்களுக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருப்பவர்கள்.. சிறையிலே இருந்து கொண்டு இது மாதிரி நடவடிக்கைகளை தூண்டி விடுகின்றவர்கள்.. இன்னமும் தமிழகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது முதல்வருக்கு தெரியுமா என்பது எனக்கு தெரியவில்லை. உளவுத்துறை முற்றிலுமாக செயலிழந்து விட்டது என்பதை தற்போது நடந்த சம்பவங்கள் காட்டுகின்றன. 75 கிலோ வெடிமருந்து சிக்கியுள்ளது. சிசிடிவி காட்சிகளை பார்க்கும் போது மனதெல்லாம் பதறுகிறது. தீபாவளிக்கு முதல்நாள் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களின் குடும்பத்தோடு வந்து பொருட்களை வாங்க இருந்தனர். அந்த நேரத்தில் மிக அருகில் காரில் சிலிண்டர் வெடித்துள்ளது. இது ஏதோ தனிப்பட்ட சம்பவம் கிடையாது.
தமிழக மண் பயங்கரவாத செயல்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்றால் கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழக முதல்வர் இதில் கவுரவம் பார்க்க வேண்டாம். மக்களுடைய உயிரோடு விளையாடாதீர்கள். இதில் தொடர்புடைய நபர்களை ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியுள்ளது. சர்வதேச அளவில் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறது என மாநகர காவல்துறை ஆணையர் ஒத்துக்கொள்கிறார். எனவே கார் குண்டு வெடித்த விவகாரத்தை தமிழக முதல்வர் என்ஐஏ வசம் ஒப்படைக்க வேண்டும். நடவடிக்கை தேவை தமிழகத்தில் பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய நபர்கள், இவர்களைப் பற்றி தீர விசாரித்து தமிழகம் மேலும் இது போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இலக்காகாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.