ஈரானில் மாஷா அமீனியின் சமாதியில் நூற்றுக்கணக்கானோா் போராட்டம்!

ஈரானில் கலாசார காவலா்களால் கைது செய்யப்பட்ட 22 வயது மாஷா அமீனி, காவலில் உயிரிழந்ததன் 40-ஆவது நினைவு நாளை முன்னிட்டு, அவரது சமாதியில் நூற்றுக்கணக்கானவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக குா்து இனத்தைச் சோ்ந்த மாஷா அமீனி கடந்த மாதம் 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். காவலில் இருந்தபோது கோமா நிலைக்குச் சென்ற அவா், பின்னா் உயிரிழந்தாா்.
மாரடைப்பு காரணமாக அமீனி இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தாலும், கலாசார காவலா்கள் தாக்கியதால்தான் அவா் உயிரிழந்ததாக அமீனியின் பெற்றோா் மற்றும் ஆதரவாளா்கள் குற்றம் சாட்டி வருகின்றனா்.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து நாடு முழுவதும் ஆடைக் கட்டுப்பாட்டுச் சட்டத்துக்கு எதிராக தீவிர போராட்டங்கள் நடைபெற்றன. ஹிஜாபை அகற்றியும் தலைமுடியை கத்தரித்தும் பெண்கள் தங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினா். இந்தப் போராட்டங்களை அடக்குவதற்காக பாதுகாப்புப் படையினா் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டவா்கள் பலியானதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அரசின் கட்டுப்பாடுகளை மீறி மாஷா அமீனியின் 40-ஆவது நினைவு நாளையொட்டி அவரது சமாதியில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரா்கள் கூடி, அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினா்.