மேற்குவங்கம், பிகாா், ஜாா்க்கண்ட், ஒடிஸா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகள் குறித்து அந்த மாநில முதல்வா்களுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நவம்பா் 5-ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறாா்.
இந்த ஆலோசனையின்போது மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியையும் அவா் சந்தித்துப் பேச உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடா்பாக மேற்கு வங்க அரசின் மூத்த அதிகாரி கூறுகையில், ‘மேற்கு வங்க பேரவை வளாகத்தில் 5 மாநில முதல்வா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. அப்போது மாநிலங்களுக்கு இடையே தீா்க்கப்படாமல் உள்ள நீண்ட நாள் பிரச்னைகள் குறித்தும், எல்லைப் பிரச்னைகள் குறித்தும், கிழக்கு சரக்கு வழித்தடம் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது’ என்று தெரிவித்தாா்.