நந்தனத்தில் ரூ.320 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமையகக் கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள அரசுக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் இன்று (27.10.2022) சென்னை, நந்தனத்தில் 320 கோடி ரூபாய் செலவில் 12 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி கட்டடமாக கட்டப்பட்டுள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமையகக் கட்டடத்தை திறந்து வைத்தார்கள்.
சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடவும். மக்களின் பயண நேரத்தை குறைத்து, பயணத்தை எளிமையாகவும், அதிநவீன வசதியாக அமைத்திடவும் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையிலான அரசால் 2007-ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, முதல்கட்ட திட்டத்தின் கட்டுமானப் பணிகளை அப்போதைய மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைக்கப்பட்டு, தற்போது சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம் – 1 மற்றும் கட்டம் -1 இன் நீட்டிப்புடன் மொத்தம் 54.1 கி.மீ நீளத்தில் இரண்டு வழித்தடங்களில் முழுமையாக பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-1 இல் 118.9 கி.மீ மொத்த நீளத்திலான மூன்று வழித்தடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 173 கி.மீ மெட்ரோ இரயில் கட்டமைப்பு, சென்னைப் பெருநகர்ப் பகுதியில் இன்னும் சில ஆண்டுகளில் இயக்கப்படவுள்ளது. திறமையான இயக்கம் மற்றும் நிர்வாகம், நீடித்த நகர்ப்புற போக்குவரத்தின் முதுகெலும்பாக சென்னை மெட்ரோ இரயில் அமைந்துள்ளது. தலைமையக கட்டிடம் தற்போது, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், கோயம்பேடு பணிமனை வளாகத்தில் அமைந்துள்ள இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தின் (Operation Control Centre) உதவியுடன் மெட்ரோ இரயில் இயக்கத்தையும், நிர்வாகப் பணிகளையும் நிர்வகித்து வருகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால இயக்கங்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நிருவாக அலுவலகத்திற்காகவும், மெட்ரோ இரயில் நிறுவன தலைமையகக் கட்டடத்தை அமைத்திட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, சென்னை, நந்தனம் மெட்ரோ இரயில் நிலையத்தினை ஒட்டிய முக்கிய சாலையான அண்ணாசாலையில், தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்த 8.96 ஏக்கர் நிலத்தில் 320 கோடி ரூபாய் செலவில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமையகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த தலைமையகக் கட்டடம், தனித்துவ வடிவமைப்பைக் கொண்டு (அடித்தளம் மற்றும் தரைத்தளத்தைத் தவிர்த்து) 12 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி கட்டடமாக கட்டப்பட்டுள்ளது. இந்திய பசுமைக் கட்டட மன்றத்தின் பிளாட்டின அளவு கோலின்படி பல்வேறு பசுமைக் கட்டடக் கூறுகளுடன் கட்டப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு மையம் சென்னை மெட்ரோ இரயில் தலைமையகக் கட்டடத்தில், கட்டம்-I மற்றும் கட்டம்-II இன் இயக்கங்களைக் கண்காணிப்பதற்கான இயக்கக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது பேரிடர் காலங்களில் ஏற்கனவே கோயம்பேட்டில் அமைந்துள்ள பிரதான இயக்கக்கட்டுப்பாட்டு மையத்தில் ஏதேனும் பழுது ஏற்படும் பட்சத்தில், இது நிழல் மையமாகவும் செயல்படவுள்ளது.
இந்தக் கட்டடத்தின் வளைந்த வடிவமைப்பு, தகவல் தொடர்பினை மேம்படுத்துவதாகவும், எளிதில் நடமாடும் வகையிலும், பூகம்ப நேரத்தில் ஏற்படும் பளு மற்றும் காற்றின் பாதிப்பினைக் குறைக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. கட்டிட வடிவமைப்பு இந்தக் கட்டடத்தின் மையப் பகுதியில், இழுவிசைக் கூரையுடன், நீள்வட்ட ஆட்டிரியம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டடத்தின் உட்பகுதியில் இயற்கையான வெளிச்சம் கிடைப்பதால் மின்சக்தியின் பயன்பாடும் குறைகிறது. ஆட்டிரியத்தின் பக்க சுவர்களில் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளதால் இயற்கையான வெளிச்சம் கிடைக்கும். சிறப்பான வடிவமைப்பு இந்தக் கட்டடத்தில் அதிக நாட்கள் உழைக்கும் ஒருங்கிணைந்த கண்ணாடி அமைப்பு முறையில், பிளவுபட்ட காற்றோட்டமான கான்கீரீட் தொகுதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் கட்டடத்திற்குள் வெப்பம் கடத்துவது குறைவதுடன், குளிர்பதன தேவையும் குறைகிறது. மேலும் 2 மற்றும் 4 சக்கர மின்சார வாகனங்களுக்கு. வாகனங்கள் நிறுத்துமிடத்திலேயே மின்னேற்றும் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு. மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், திரு. ஆர். கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர் திரு.த. வேலு, துணை மேயர் திரு. மு. மகேஷ் குமார், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் திரு. பிரதீப் யாதவ், இ.ஆ.ப. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் திரு. ஹிதேஸ் குமார் எஸ். மக்வானா, இ.ஆ.ப., சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. எம்.ஏ. சித்திக், இ.ஆ.ப., ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் சிறப்புப் பணி அலுவலர் திரு. ஜெய்தீப், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர்கள் திரு.டி. அர்ச்சுனன் (திட்டங்கள்), திரு. ராஜேஷ் சதுர்வேதி (இயக்கம் மற்றும் பராமரிப்பு), அரசு உயர் அலுவலர்கள் மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.