கோவையில் ரொம்பவே மோசமான சூழல் தான் இருக்கு: எஸ்பி வேலுமணி

கோவையில் இப்போது மோமசான ஒரு சூழலே நிலவுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்து உள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரத்தில் கோவை உக்கடம் கோயில் அருகே இருந்த காரில் கேஸ் சிலிண்டர் திடீரென வெடித்துச் சிதறியது. இந்தச் சம்பவத்தில் கார் இரு துண்டுகளானது. நல்வாய்ப்பாக அதிகாலை நடந்த இந்தச் சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் சிலரைக் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கைத் தேசியப் பாதுகாப்பு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது. தீபாவளிக்கு முதல் நாள் இந்தச் சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவையில் பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கோவை எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:-

எனது தொகுதிக்குத் தேவையான 10 கோரிக்கைகள் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறேன். சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியும் கூட பாதி தான் வந்துள்ளது. மீதி பாதி நிதி இன்னும் வரவில்லை. இந்த நிதியைத் தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். கோவை நகரில் அனைத்து சாலைகளும் மிகவும் மோசமாகப் பழுதடைந்த நிலையில் உள்ளது. சாலைகளைச் செப்பனிடும் பணிகளை வேகமாக முடிக்க வேண்டும். கலெக்டரிடமும் கூட இதை நாங்கள் வலியுறுத்தி உள்ளோம்.

கோவையில் இப்போது மோசமான ஒரு சூழ்நிலை நிலவுகிறது. கோவை மக்கள் அனைவரும் அச்சத்தில் இருக்கிறார்கள். எங்கோ 1998 குண்டு வெடிப்பு சம்பவம் போல மீண்டும் நடந்துவிடுமோ என அஞ்சுகிறார்கள். காலம் தாழ்த்தாமல் இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை தொடர்க் குண்டு வெடிப்பால் நகரின் வளர்ச்சி 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது. இப்போது தான் அது மெல்லச் சீராகி வந்தது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உளவுத்துறை ஐ‌ஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் என யாரும் எந்த வேலையும் பார்ப்பதில்லை. உளவுத்துறை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் நடவடிக்கையில் மட்டுமே தமிழக அரசு ஈடுபட்டு உள்ளது. இனியாவது தமிழக அரசு விழித்துக் கொண்டு மக்களைப் பாதுகாக்க வேண்டும். யார் தவறு செய்தாலும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அதற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக ஜமாத் தலைவர்கள் கூறி உள்ளனர். நாம் எந்த மதத்தையும் ஒதுக்கக் கூடாது. கோவை மக்கள் அமைதியையே விரும்புகிறோம். கோவைக் குண்டு வெடிப்பு பாதிப்புகள் இன்னும் இங்கு உள்ளது. அதில் இரு சமூகமும் பாதிக்கப்பட்டது.. மக்களைப் பாதுகாக்கும் வேலையைக் காவல்துறை பார்க்க வேண்டும். கோவையைக் காப்பாற்றுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.