தனியார் கல்வி நிறுவனங்கள் சில வெளிநாட்டு பல்கலைகளுடன் இணைந்து, ‘ஆன்லைன்’ வாயிலாக அளிக்கும் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி படிப்புகளுக்கு அங்கீகாரம் கிடையாது என, யு.ஜி.சி., எச்சரித்து உள்ளது.
கொரோனா பரவலுக்குப் பின், ஆன்லைன் வாயிலாக கல்வி பயிலும் வழக்கம் அதிகரித்தது. இதையடுத்து, ‘எட்டெக்’ எனப்படும் தனியார் கல்வி நிறுவனங்கள் புற்றீசல் போல பெருகின. இவை, பல்வேறு வெளிநாட்டு பல்கலையுடன் இணைந்து ஆன்லைன் வாயிலாக பட்டப் படிப்புகளை நடத்துகின்றன. இது போன்ற தனியார் கல்வி நிறுவனங்கள் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை பின்பற்றுவதாக கடந்த ஜூலையில் மத்திய அரசு எச்சரித்தது. இதையடுத்து, இது போன்ற தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து, தொலைதுார கல்வி மற்றும் ஆன்லைன் வாயிலாக வகுப்புகளை நடத்த வேண்டாம் என, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ஆகியவை சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தன.
இந்நிலையில், இந்த இரண்டு கல்வி ஒழுங்குமுறை அமைப்புகள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
பிஎச்.டி., எனப்படும் முனைவர் பட்டம் வழங்குவதற்கான தரத்தை பராமரிக்க, குறைந்தபட்ச தரநிலை மற்றும் நடைமுறைகளை யு.ஜி.சி., வகுத்துள்ளது. இந்த ஒழுங்குமுறைகளை பின்பற்றியே அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் முனைவர் பட்டம் வழங்க வேண்டும். இதை விடுத்து, வெளிநாட்டு பல்கலைகளுடன் இணைந்து, ஆன்லைன் வாயிலாக முனைவர் பட்டம் வழங்குவதாக விளம்பரம் செய்யும், எட்டெக் நிறுவனங்கள் எனப்படும் தனியார் கல்வி நிலையங்களின் விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம். அவ்வாறு ஆன்லைன் வாயிலாக பெறப்படும் முனைவர் பட்டத்துக்கு, யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் கிடையாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.