என்.எல்.சி., தொடர்பாக பிரதமரை சந்தித்து பிரச்னைகளை நிவர்த்தி செய்வோம்: பிரேமலதா

என்.எல்.சி., தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலன் காக்க, பிரதமர் மோடியை சந்தித்து பிரச்னைகளை நிவர்த்தி செய்வோம் என, தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

கடலுார் மாவட்டம் நெய்வேலியில் தே.மு.தி.க., நகர செயலாளர் வைத்தியலிங்கம் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், என்.எல்.சி., தலைமை அலுவலகத்தில் அந்நிறுவனத்தின் சேர்மன் ராகேஷ்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். பின்னர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-

என்.எல்.சி.,யில் வேலைவாய்ப்பு மற்றும் நெய்வேலியை சுற்றியுள்ள கிராமங்களில் நில எடுப்பு தொடர்பாக தற்போது நிலவும் பிரச்னைகள் குறித்து என்.எல்.சி., சேர்மன் ராகேஷ்குமார் விரிவாக எடுத்துரைத்தார். என்.எல்.சி.,க்கு தேவைப்படும் நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு தலா ரூ.23 லட்சம் வழங்க உள்ளதாகவும் கூறினார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு திருப்தி இல்லாததால் அவர்களுக்கு நிலத்தின் தன்மைக்கேற்ப நிவாரணத் தொகையை குறைந்தபட்சம் ரூ. 25 லட்சமாக உயர்த்தி தர வேண்டுமாறு கோரிக்கை வைத்துள்ளோம்.
விவசாயிகளின் கருத்துக்கள் அடிப்படையில் அவர்களது கோரிக்கைகள், என்.எல்.சி., நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களின் கோரிக்கைகள், ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, பிரதமர் மோடியை சந்தித்து, இந்த பிரச்னைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவோம்.

இந்தியா முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்குவதாக பிரதமர் அறிவித்துள்ளார். அதில், தமிழகத்தில் குறிப்பாக என்.எல்.சி.,யால் பாதிக்கப்பட்ட விவசாய மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துவோம். தமிழக மக்களுக்காக மத்திய, மாநில அரசுகளிடம் தே.மு.தி.க., தொடர்ந்து குரல் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.