பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ், புவி தட்டுகள் நகர்கின்ற இடத்தில் அமைந்து இருப்பதால் அங்கு எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இதன் காரணமாக அந்த நாடு உலகின் பேரழிவு நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தினால் உருவான நிலச் சரிவில் சிக்கி 47 உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை நால்கே என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. புயலை தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இடைவிடாது பெய்த மழையால் மகுயிண்டனாவோ மாகாணத்தின் பல நகரங்கள் வெள்ளக்காடாகின. கடும் நிலச்சரிவு மலைகளின் இருபுறமும் வழிந்தோடும் தண்ணீர் ஆற்றில் கலப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. புயல் மழையைத் தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு முழு வீச்சில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மகுயிண்டனாவோ மாகாணத்தின் சின்சுவாட் நகரில் உள்ள ஓடின் பகுதியில் 27 பேர் நீரில் மூழ்கியும் நிலச்சரிவில் சிக்கியும் பலியாகினர். அதே போல, சின்சுவாட் நகரின் ப்ளா பகுதியில் 10 பேர் உபி நகரை சேர்ந்த 10 பேர் என மொத்தம் 47 பேர் பலியாகியுள்ளதாக பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்பு குறித்து பேசிய அந்நாட்டின் உள்துறை அமைச்சர் நாகிப் சினாரிம்போ, நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களில் 11 பேரது உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. நிலச்சரிவினால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை இதற்கு மேல் உயராது என்று நினைக்கிறேன். மேலும் 16 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.