எந்த ஆதாரத்தோடு ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்தை வெளியிட்டார்: சபாநாயகர் அப்பாவு!

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் எந்த ஆதாரங்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்தை வெளியிட்டார் என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதமடைந்ததோடு, காரில் இருந்த உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஜமேஷா முபினின் கூட்டாளிகள் 5 பேரை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டினார். மேலும், இந்த வழக்கை தேசிய பாதுகாப்பு அமைப்பிற்கு வழங்கியதில் ஏன் இவ்வளவு தாமதம் எனவும் அவர் கேள்வி எழுப்பியதுடன், இந்த சமபவத்தில் தடயங்கள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தடயங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாக தமிழக ஆளுநர் எந்த ஆதாரங்களுடன் கருத்தை வெளியிட்டுள்ளார் என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லை மாவட்டம் பணகுடியில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரண உதவியை சபாநாயகர் அப்பாவு நேரில் வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

கோவை குண்டுவெடிப்பு சம்பந்தமாக ஆளுநர் எந்த ஆதாரங்களுடன் கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார் என்பது தெரியவில்லை. நானும் ஆளுநரும் பொதுவான நபர்கள்தான், ஆளுநர் தடயங்கள் அளிக்கப்பட்டு இருப்பதாக பொதுவெளியில் கருத்துக்களை வெளியிட்டு இருக்க வேண்டாம். அதனை தவிர்த்து இருக்கலாம். தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் இருந்தால் ஆளுநர், தமிழக அரசிடம் அதனை தெரிவித்து அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்திருக்கலாம்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயத்தில் நடந்த வெடி விபத்து சம்பந்தமாக திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, தற்போது கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த முபினை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து அதன் பின் விட்டு விட்டார்கள் எனவும், பாரதிய ஜனதா கட்சியும், தேசிய புலனய்வு முகமையும் இணைந்து தான் முபினுக்கு பயிற்சி கொடுத்ததாகவும் உறுதிப்படாத தகவல்கள் வெளியாகி கொண்டேதான் இருக்கிறது. அதேபோல்தான் ஆளுநரின் கருத்தும் இருப்பதாக நான் கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.